2015-06-13 15:44:00

அருள்பணியாளர் கனிவுடன் மேய்ப்புப்பணியாற்ற வலியுறுத்தல்


ஜூன்,13,2015. உரோம் நகரில் மூன்றாவது உலக அருள்பணியாளர் தியானத்தில் கலந்து கொள்ளும் ஏறக்குறைய ஆயிரம் அருள்பணியாளர்களுக்கு இவ்வெள்ளி மாலை புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள் இறைமக்கள் மீது இரக்கம் காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

விசுவாசிகள் மறையுரைகளை எட்டு நிமிடத்திற்குமேல் கேட்க முடியாது, உங்கள் இதயத்திலிருந்து நீங்கள் பேச வேண்டுமென்று இறைமக்கள் விரும்புகின்றனர், ஒரு கருத்து, ஓர் உருவம், ஓர் உணர்வு இவற்றையே ஒரு மறையுரை கொண்டிருக்க வேண்டும், மறையுரை ஒரு சொற்பொழிவோ அல்லது மறைக்கல்வியில் எடுக்கும் ஒரு பாடமோ அல்ல என்றும் கூறினார் திருத்தந்தை.

அருள்பணியாளர்களாகிய நீங்கள் மறையுரைகளை ஒன்று சேர்ந்து தயார் செய்யுங்கள், இறையாட்சி பற்றி, இயேசுவின் மலைப்பொழிவு போதனை பற்றி, இதயத்தை மாற்றும் அன்பு பற்றி மறையுரையாற்றுங்கள், கொலைசெய்யும் பயங்கரவாதத்தைவிட கடவுளின் அன்பு வல்லமை மிக்கது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை, இயேசு இல்லாத, இரக்கம் இல்லாத திருஅவையாக இருக்கக் கூடாது, திருஅவை எப்போதும் அன்னையாக இருக்குமாறு செயல்படுங்கள் என்று தயவுடன் கேட்பதாகவும் தெரிவித்த திருத்தந்தை, அருள்பணியாளர்கள் இறைவனின் கனிவின் திருப்பணியாளர்களாக இருக்க வேண்டும், கனிவின் திருப்பணி இறையருள் நிறைந்தது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.