2015-06-13 15:53:00

CONMEBOLலிருந்து நன்கொடைகள் பெறுவது நிறுத்தி வைப்பு


ஜூன்,13,2015. “இன்று திருஅவை மறைசாட்சிகளின் திருஅவை, இதற்கு எண்ணற்ற வீரத்துவமான சாட்சிகள் உள்ளனர், இந்த மறைசாட்சிகளின் துணிச்சலிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோம்” என்ற வார்த்தைகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. 

மேலும், உலகளாவிய கால்பந்து கூட்டமைப்பில் கடந்த மாதத்தில் எழுந்துள்ள ஊழல் விவகாரத்தால், தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பிலிருந்து நன்கொடைகள் பெறுவதை, அந்த ஊழல் குறித்த விசாரணைகள் முடியும்வரை வத்திக்கான் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இளையோர் பிறரன்பு அமைப்புக்கு, CONMEBOL என்ற தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு நன்கொடைகள் வழங்குவது குறித்து ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி நன்கொடைகள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 11ம் தேதி சிலே நாட்டில் தொடங்கியுள்ள அமெரிக்க கால்பந்து விளையாட்டின்போது போடப்படும் ஒவ்வொரு பந்துக்கும் பத்தாயிரம் டாலரை, Scholas Occurrentes வத்திக்கான் பிறரன்பு அமைப்புக்கு வழங்குவதாக, CONMEBOL கூட்டமைப்பு உறுதியளித்திருந்தது.

FIFA என்ற உலகளாவிய கால்பந்து கூட்டமைப்பின் ஏழு அதிகாரிகளில் ஒருவராகிய வெனெசுவேலா நாட்டின் Rafael Esquivel அவர்கள், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த மே 27ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.