2015-06-12 16:05:00

விமான நிலைய ஆன்மீகப் பணியாளர்களுக்கு திருத்தந்தை உரை


ஜூன்,12,2015. இறைவனின் எல்லையில்லா கருணை தெளிவாக வெளிப்படும், ஒப்புரவு மற்றும் திருநற்கருணை அருளடையாளங்கள் வழியாக, நல்ல ஆயராம் கிறிஸ்து விமான நிலையங்களிலும் தம் மக்களைப் பராமரிக்க விரும்புகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விமான நிலையங்களில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான 16வது அனைத்துலக கருத்தரங்கில் கலந்து கொள்ளும் எண்பது பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் இறைவார்த்தையைக் கேட்கும் ஆவலைத் தூண்டுவது விமான நிலைய ஆன்மீகப் பணியாளர்களின் மறைப்பணி என்று கூறினார்.

வர்த்தகம், சுற்றுலா என பல்வேறு நோக்கங்களுக்காகப் பயணம் மேற்கொள்ளும் மக்களை மட்டுமல்லாமல், சிறப்புக் கவனம் தேவைப்படும் புலம்பெயர்வோர், குடிபெயர்வோர், சிறாரும், வயதானவர்கள், சிறார் என பலதரப்பட்ட மக்களையும்    விமான நிலையங்களில் சந்திக்க வேண்டியிருப்பதால், பன்மையில் ஒற்றுமை என்ற இடத்தில் மறைப்பணியாற்ற ஆன்மீகப் பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

விபத்து, விமானக் கடத்தல் போன்றவற்றால் கடுமையாய்ப் பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் உளவியல் முறையில் பணியாற்ற வேண்டியிருப்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவார்த்தை மூலம் ஆறுதல் அளிக்குமாறும், இறைவனின் இரக்கத்தில் மக்கள் நம்பிக்கை வைத்து வாழ்வதற்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

சாட்சிய வாழ்வு மூலம், மக்கள் தங்கள் இதயங்களைக் கிறிஸ்துவுக்குத் திறப்பதற்கு உதவுமாறு கூறிய திருத்தந்தை, மக்கள் மத்தியில் அன்பு, உரையாடல், உடன்பிறப்பு உணர்வு, அமைதியான சமூகச் சூழல் போன்றவை நிலவும் இடங்களாக விமான நிலையங்கள் அமையுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன்,10, இப்புதனன்று தொடங்கியுள்ள இக்கருத்தரங்கு, ஜூன்,13 வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும்.

2013ம் ஆண்டில் ஏறக்குறைய 300 கோடியாக இருந்த விமானப் பயணியர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 310 கோடியாக உயர்ந்தது. இன்று உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 2 கோடியே 92 இலட்சம் பயணியர் மற்றும் எண்பதாயிரம் வர்த்தக விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2020ம் ஆண்டில் 20 கோடி வர்த்தக விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.