2015-06-12 16:20:00

அமெரிக்கக் கோப்பை 2015ல் மனித வர்த்தகத்தைத் தடைசெய்க


ஜூன்,12,2015. சிலே நாட்டில் அமெரிக்கக் கோப்பை 2015 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாள்களில், சிலே மற்றும் அர்ஜென்டீனா நாடுகளில் மனித வர்த்தகத்தைத் தடைசெய்வதற்கு கத்தோலிக்க நிறுவனங்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இலத்தீன் அமெரிக்க நாடான சிலேயில் இவ்வியாழனன்று அமெரிக்கக் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளவேளை, அர்ஜென்டீனா ஆயர் பேரவையின் சுற்றுலா ஆணைக்குழு தலைமையில் பல்வேறு திருஅவை மற்றும் பொது அமைப்புகள் மனித வர்த்தகத்தைத் தடைசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

மனித வர்த்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு பொது மக்களைத் தூண்டி வரும் கத்தோலிக்க நிறுவனங்கள், மனித வர்த்தகத்தைத் தடைசெய்க, பாலியல் தொழிலுக்கு எதிர்ப்பு என்ற வார்த்தைகள் அடங்கிய விளம்பரங்களையும் எழுதி வெளியிட்டுள்ளன.

உலக கோப்பை விளையாட்டுப் போட்டிகள் சமயத்தில் மனித வர்த்தகம் அதிகரிக்கின்றது என்றும், ஜெர்மனியிலும் தென்னாப்ரிக்காவிலும் இப்போட்டிகள் நடைபெற்றபோது இந்நாடுகளில் முறையே 30 மற்றும் 40 விழுக்காடுகள் அதிகரித்தன என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜூன்,11ம் நாளன்று ஆரம்பித்துள்ள அமெரிக்கக் கோப்பை 2015, ஜூலை 4ம் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.