2015-06-11 16:10:00

லாத்வியா, எஸ்தோனியா நாடுகளின் ஆயர்களுடன் திருத்தந்தை


ஜூன்,11,2015. சர்வாதிகார மன்னர்களின் பிடியிலிருந்து தப்பித்துள்ள நாடுகள், இறைநம்பிக்கையின்மை, அனைத்தையும் நிரந்தரமற்றதாய் காணும் நிலை ஆகிய கண்ணோட்டங்களால் உருவாகும் அடக்குமுறைகளில் தற்போது தவித்து வருகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, திருத்தந்தையைச் சந்திக்க உரோம் நகர் வருகை தரும் ஆயர்களின் வரிசையில், லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளைச் சார்ந்த ஆயர்கள், வத்திகானில் மேற்கொண்டுள்ள 'அத் லிமினா' சந்திப்பின்போது, அவர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

சர்வாதிகார மன்னரின் ஆதிக்கமாயினும், தவறான கொள்கைகளின் ஆதிக்கமாயினும், அவற்றின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கும் பொறுப்பு ஆயர்களுக்கு உண்டு என்று திருத்தந்தை, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

மக்களை விடுவிக்கும் இப்பணியில், ஆயர்கள் மனம் தளராமல் ஈடுபடவும், மனம் தளரும் அருள் பணியாளர்களை தகுந்த வகையில் ஊக்கமூட்டவும் ஆயர்களுக்கு பரிந்துரைகளை வழங்கினார் திருத்தந்தை.

அர்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டைக் கொண்டாடிவரும் இவ்வேளையில், அர்ப்பணிக்கப்பட்டோர் ஆற்றும் பணிகளைவிட, அவர்கள் வாழ்வால் நற்செய்திக்கு சான்று பகரவேண்டும் என்று ஆயர்களுக்கு வழங்கிய உரையில் திருத்தந்தை வலியுறுத்தினார்.

பொருளாதாரச் சரிவினால், வேற்றுநாடுகளுக்கு வேலைத் தேடிச்செல்லும் சூழல் எழுவதால், பல குடும்பங்களில், தாய் அல்லது தந்தை மட்டுமே தங்கியிருக்கும் நிலை உருவாகி உள்ளதென்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இத்தகையக் குடும்பங்கள், ஆயர்களின் தனிப்பட்ட கவனத்தையும், பராமரிப்பையும் பெறவேண்டுமென்று விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.