2015-06-11 16:30:00

கிறிஸ்தவர்கள் அற்ற லெபனான், ஈடுசெய்யமுடியாத இழப்பு


ஜூன்,11,2015. லெபனான் நாட்டில் கிறிஸ்தவர்களின் பிரசன்னம் குறைந்து வருவது, மற்றும் இல்லாமல் போவது, லெபனான் நாட்டிற்கு மட்டுமல்ல, மத்தியக் கிழக்குப் பகுதி முழுமைக்கும் ஈடுசெய்யமுடியாத ஓர் இழப்பு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருப்பீட உச்சநீதி மன்றத்தின் தலைவராக பணியாற்றும் கர்தினால் தொமினிக் மம்பெர்த்தி அவர்கள், மே மாதம் 29ம் தேதி முதல், ஜூன் 4ம் தேதி முடிய, லெபனான் நாட்டில் மேற்கொண்ட ஒரு பயணத்தைக் குறித்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு, இப்புதனன்று அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தலைவர், கர்தினால் பெக்காரா புத்ரோஸ் ராய் அவர்களின் அழைப்பின் பேரில் தான் மேற்கொண்ட இப்பயணத்தில், லெபனான் நாட்டின் ஹரிச்சாவில் அமைந்துள்ள (Harissa) மரியன்னையின் திருத்தலத்தில், மே வணக்க மாதத்தின் நிறைவுத் திருப்பலியாற்றியது ஓர் உன்னத அனுபவமாக இருந்ததென்று கர்தினால் மம்பெர்த்தி அவர்கள் தன்  பேட்டியில் குறிப்பிட்டார்.

லெபனான் நாட்டிலிருந்து கிளம்புவதற்கு முந்திய நாள், கத்தோலிக்கர், கிறிஸ்தவர், ஆர்த்தடாக்ஸ் சபைகள், மற்றும் இஸ்லாமியரின் இரு பிரிவினர் அனைவரோடும் மேற்கொண்ட ஓர் உரையாடல் கூட்டம், தன் பயணத்தின் மற்றோர் உச்சநிலை அனுபவமாக இருந்ததென்று கர்தினால் மம்பெர்த்தி அவர்கள் கூறினார்.

கிறிஸ்தவர்கள் அல்லாத ஒரு மத்தியக் கிழக்குப் பகுதியை நம்மால் எண்ணிப்பார்க்க இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை தன் பேட்டியில் நினைவுகூர்ந்த கர்தினால் மம்பெர்த்தி அவர்கள், லெபனான் நாட்டில் குறைந்து, அழிந்துவரும் கிறிஸ்தவர்களின் பிரசன்னம், மத்தியக் கிழக்குப் பகுதியில் எதிர்மறைத் தாக்கங்களை உருவாக்கும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.