2015-06-11 16:24:00

இரஷ்ய அரசுத்தலைவர் புடின் திருத்தந்தையுடன் சந்திப்பு


ஜூன்,11,2015. ஜூன் 10, இப்புதன் மாலை ஆறுமணியளவில் இரஷ்ய அரசுத் தலைவர் விளாடிமிர் புடின் அவர்கள், வத்திக்கானுக்கு வருகைதந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார்.

புதன் மாலை 6.15 மணியளவில் ஆரம்பமான இச்சந்திப்பு, 50 நிமிடங்கள் நீடித்தது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை, அருள் பணியாளர் பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

உக்ரெயின் மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் நிலவிவரும் மோதல்கள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது என்றும், உக்ரெயினில் அமைதியை நிலைநாட்ட உண்மையான உரையாடல்கள் இடம்பெறுவதை தான் விரும்புவதாக திருத்தந்தை கூறினார் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில், குறிப்பாக, சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் அமைதி உருவாகவேண்டியதன் அவசரத்தையும், அங்கு கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் தீரவேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை, அரசுத் தலைவர் புடின் அவர்களிடம் எடுத்துரைத்தார் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

இருவருக்கும் இடையே பரிசுப் பொருள்கள் பரிமாறப்பட்டபோது, அமைதியின் வானத் தூதரின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பதக்கத்தை, திருத்தந்தை, அரசுத் தலைவருக்கு அளித்தார் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

இரஷ்ய அரசுத் தலைவர் புடின் அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்த அதேவேளையில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர், பால் ரிச்சர்ட் காலகர் அவர்களும், இரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர், செர்கே லாவ்ரோவ் (Sergey Lavrov) அவர்களும் சந்திப்பில் ஈடுபட்டனர் என்று திருப்பீடப் பேச்சாளர், அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.