2015-06-11 16:41:00

இன ஒற்றுமை குறித்து அமெரிக்க ஆயர்கள் அறிக்கை


ஜூன்,11,2015. மக்களைக் காக்கும் நோக்கத்துடன் காவல் துறையில் பணியாற்றுவோர், அதே மக்களிடமிருந்து மனதளவில் விலகி இருக்கும் நிலை, வருத்தத்திற்குரியது என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

அண்மைய மாதங்களில், காவல் துறையினரின் அத்துமீறிய நடவடிக்கைகளால், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சில நகரங்களில் கறுப்பின மக்கள் பெரும் வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர்.

கறுப்பு, வெள்ளை இனத்தவரிடையே மோதல்களை உருவாக்கியுள்ள இச்செயல்களையும், காவல் துறையினருக்கு எதிராக எழுந்த போராட்டங்கள், வரம்பு மீறிச் சென்றதையும் கண்டனம் செய்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஆயர் பேரவையின் தலைவரும், Louisville பேராயருமான Joseph Kurtz அவர்கள் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், தியாக உள்ளத்துடன் காவல் துறையினர் ஆற்றும் பணிகளை, பாராட்டியுள்ளார்.

கடினமானச் சூழல்களில் பணியாற்றும் காவல் துறையினருக்கு செபிக்கும்படி விண்ணப்பிக்கும் இவ்வறிக்கை, மனிதாபிமான உணர்வுடன் காவல் துறையினர், நேரிய வழிகளில் சட்டத்தைக் காப்பாற்ற முயலவேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளது.

கறுப்பு, வெள்ளை இனத்தவரிடையே பாகுபாடுகள் மிகுந்திருந்த காலத்திலேயே, 1947ம் ஆண்டு, கர்தினால் ஜோசப் ரிட்டர் அவர்கள், இவ்விரு இனத்தைச் சார்ந்த குழந்தைகள் ஒன்றாகக் கல்வி கற்கவேண்டும் என்ற எண்ணத்தில், St Louisல் இயங்கிவந்த கத்தோலிக்கப் பள்ளிகளில் இன வேறுபாட்டை ஒழித்தார் என்ற வரலாற்று நிகழ்வு, இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அனைத்து மக்களிடையே அமைதி நிலவ செபித்தல், மனித மாண்பை உணரும் வண்ணம், இறைவார்த்தையையும், திருஅவை படிப்பினைகளையும் கற்றறிதல், வேற்றின மனிதரோடு உண்மையான உரையாடல் முயற்சிகளை மேற்கொள்ளுதல், கத்தோலிக்கப் பங்குகளும், நிறுவனங்களும் அனைவரையும் வரவேற்கும் மனப்பான்மையில் வளர்தல், காவல் துறையினரைச் சரிவரப் புரிந்துகொண்டு, அவர்கள் ஆற்றும் பணிகளுக்கு நன்றி சொல்லுதல் ஆகிய ஐந்து பரிந்துரைகளை, அமெரிக்க ஆயர்கள்  இறுதியில் முன்வைத்துள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.