2015-06-10 17:06:00

மோசுல் நகரம் கைப்பற்றப்பட்டதன் முதலாம் ஆண்டு


ஜூன்,10,2015 சிரியா நாட்டின் மோசுல் நகரிலிருந்து வேரோடு அகற்றப்பட்ட கிறிஸ்தவர்களின் மனங்களைப் புண்படுத்தும் முயற்சிகளில், ISIS தீவிரவாதிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று மோசுல் மறைமாவட்டத்தைச் சேர்ந்த, சிரிய கத்தோலிக்க அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.

2014ம் ஆண்டு ஜூன் 9,10 ஆகிய தேதிகளில், ISIS தீவிரவாதிகளால் மோசுல் நகரம் கைப்பற்றப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், புனித எப்ரேம் பெயரைத் தாங்கிய சிரிய கத்தோலிக்க ஆலயத்தை, ஒரு மசூதியாக மாற்றும் முயற்சியில் ISIS அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகையச் செயல்கள், ஏற்கனவே புண்பட்டிருக்கும் கிறிஸ்தவ மனங்களை இன்னும் காயப்படுத்துகின்றன என்று சிரிய கத்தோலிக்க அருள் பணியாளர் Georges Jahoula அவர்கள் கூறினார்.

மோசுல் நகர், ISIS தீவிரவாதிகள் பிடியில் சிக்கியபின், அங்கு பாதுக்காக்கப்பட்டு வந்த கிறிஸ்தவ பாரம்பரியச் சின்னங்கள் அனைத்தும், கடந்த ஓராண்டில், முற்றிலும் அழிவுறும் நிலையில் உள்ளன என்று, அனைத்துலக சமயச் சுதந்திரக் கழகம் இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 1700 ஆண்டுகளுக்கும் மேலாக, கிறிஸ்தவம் வேரூன்றி வளர்ந்துவந்த மோசுல் நகரில் வாழ்ந்த 5 இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள், அந்நகரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வெளியான இவ்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.