2015-06-10 15:50:00

திருத்தந்தையின் மறைக்கல்வி – குடும்பத்தில் நோயாளிமீது அக்கறை


ஜூன்,10,2015. குடும்பம் குறித்த புதன் மறைக்கல்வி உரையில் தொடர்ச்சியாக, தாய் தந்தை, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், தாத்தா பாட்டிகள் என குடும்ப உறுப்பினர்கள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து வந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், குடும்பத்தின் ஒரு நிலை குறித்து தன் கருத்துக்களை வழங்கினார்.

எல்லாக் குடும்பங்களுக்கும் பொதுவான ஒரு நிலை குறித்து இன்று நோக்குவோம், அதுவே நோய் என்பதாகும். பல வேளைகளில் இயேசு நோயாளிகளைச் சந்தித்ததையும், அவர்களைக் குணப்படுத்தியதையும் குறித்து நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம். துன்புறுவோருக்கு குணமளிப்பதற்கான ஆவல், அவரின் மேய்ப்புப்பணியின் மையப்பகுதியாக இருந்தது. குணமளிக்கும் இந்த ஆவலானது, சட்டத்தை அனுசரிப்பதைவிட முதலிடம் பெற்றதையும் நாம் காண்கிறோம். நோயாளிகளுக்கு அருகே சென்று அவர்களின் ஆழமானக் காயங்களைத் தொட்டுக் குணப்படுத்தி, அவர்களுக்கு அமைதியைக் கொணர்ந்த இயேசு, குணப்படுத்தும் வல்லமையை வழங்கி, அதே பணியை ஆற்றுமாறு, தன் சீடர்களையும் அனுப்பிவைக்கிறார்.  குடும்ப அங்கத்தினர் ஒருவர் அனுபவிக்கும் நோய், அக்குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் துன்பம் தரும் ஒன்றாக அமையலாம். நோயாளிகளுக்காகவும், மரணத்தறுவாயில் இருப்போருக்காகவும், குடும்ப அங்கத்தினரின் நோயால் துன்புறும் குடும்பங்களுக்காகவும் இடைவிடாமல் செபிக்கவும், ஆதரவு வழங்கவும், கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் அழைப்புப் பெற்றுள்ளோம். எழைகளுடன் ஒருமைப்பாட்டை அனுபவிக்க உதவும் நோக்கில், நாம் நம் குழந்தைகளுக்கு, நோயாளிகள் மீது காட்டப்படவேண்டிய அன்பு குறித்து கற்பிக்கவேண்டும்.  இதன் வழி, நாம் அக்குழந்தைகள் மற்றவர்களின் துன்பம் குறித்து உணர்ச்சியற்றவர்களாய் இல்லாமல் இருக்கும் அதேவேளை,  நோயாளிகளுக்கு உதவுபவர்களாகவும், ஒவ்வொரு மனித அனுபவத்தையும் முழுமையாக வாழ்பவர்களாகவும் இருக்க உதவுவோம். நோயுற்றுள்ளவேளைகளில் குடும்பங்களுக்குத் திருஅவை காட்டும் ஆதரவிற்கும், குறிப்பாக குடும்பங்கள் தங்களிடையே ஒருவருக்கொருவர் வழங்கும் ஆதரவிற்காகவும் நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோமாக.

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வி உரையில், ‘குடும்பங்களில் நோயாளிகளை அன்புகூர்ந்து ஆதரவளிப்பது’ குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். மறைக்கல்வி உரையின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடத்தப்பட்டு, எட்டுமாதங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட தமிழக இயேசு சபை அருள் பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார் அவர்கள், திருத்தந்தையின் புதன் மறைகல்வி உரையில் கலந்து கொண்டார். இவ்வுரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து, தன் ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.