2015-06-10 16:24:00

கர்தினால்கள் சிறப்பு குழுவின் பத்தாவது ஆலோசனைக் கூட்டம்


ஜூன்,10,2015 திருப்பீடத்தின் நிதிநிலைமை மற்றும் பொருளாதாரம், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு, திருப்பீடத்தின் தொடர்புசாதனங்கள் ஆகியவை, திருத்தந்தையுடன் கர்தினால்களின் சிறப்பு குழு மேற்கொண்ட பத்தாவது ஆலோசனைக் கூட்டங்களில் பேசப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், இயேசு சபை அருள் பணியாளர் பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

உலகின் பல நாடுகளிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தேர்தெடுக்கப்பட்டு, கடந்த ஈராண்டளவாய் செயலாற்றிவரும் ஒன்பது கர்தினால்களின் சிறப்புக் குழு, ஜூன் 8, இத்திங்கள் முதல் 10, இப்புதன் முடிய வத்திக்கானில் மேற்கொண்ட 10வது ஆலோசனைக் கூட்டங்களில் திருத்தந்தையும் பெருமளவில் கலந்துகொண்டார் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் இப்புதன் மதியம் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருப்பீடத்தின் நிதிநிலைமை மற்றும் பொருளாதாரம் குறித்து, கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்களும், சிறுவர் சிறுமியரின் பாதுகாப்பு குறித்த விவரங்களை கர்தினால் ஷான் பாட்ரிக் ஒ'மாலி அவர்களும் அறிக்கைகள் சமர்ப்பித்தபின், அவை குறித்த விவாதங்கள் நடைபெற்றன என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் எடுத்துரைத்தார்.

திருப்பீடத்தின் தொடர்புசாதன நிறுவனங்களாக இயங்கும் வத்திக்கான் வானொலி, வத்திக்கான் தொலைக்காட்சி, L'Osservatore Romano என்ற நாளிதழ் ஆகியவை இன்னும் தகுந்த முறையில் ஒருங்கிணைக்கப்படும் முயற்சிகள் குறித்த ஆய்வுகளுக்கு கர்தினால்கள் குழு ஆதரவு தெரிவித்துள்ளது என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

சுற்றுச்சூழல் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் எழுதப்பட்டு, விரைவில் (ஜூன் 18) வெளியாகவிருக்கும் சுற்றுமடல் குறித்த விவரங்கள், கர்தினால்கள் குழுவின் இறுதி அமர்வில் பேசப்பட்டன என்றும், இக்கர்தினால்கள் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் மாதம் 14 முதல் 16 முடிய நடைபெறும் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.