2015-06-10 15:05:00

அமைதி ஆர்வலர்கள் : 1985ல் நொபெல் அமைதி விருது(IPPNW)


ஜூன்,10,2015. IPPNW எனப்படும் அனைத்துலக அணுப் போர் தடுப்பு மருத்துவர்கள் அமைப்புக்கு 1985ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. அணு ஆயுதப் போரினால் ஏற்படும் கடும் விளைவுகள் குறித்து மனித சமுதாயத்திற்கு இந்த அனைத்துலக அமைப்பு ஆற்றிய சிறப்பான பணிகளைப் பாராட்டும் விதமாக இவ்விருது வழங்கப்படுவதாக, 1985ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி இவ்விருதை அறிவித்த நார்வே நொபெல் விருதுக் குழு கூறியது. உலகின் வல்லரசுகளாக இருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், முன்னாள் சோவியத் யூனியனுக்கும் இடையே அணுப் போரைத் தவிர்க்கும்  நோக்கத்தில், இவ்விரு நாடுகளைச் சார்ந்த மருத்துவர்கள் இணைந்து 1980ம் ஆண்டில் IPPNW அமைப்பை உருவாக்கினர். மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியாத அணுப் போரின் விளைவுகளைத் தடுப்பதற்கு மருத்துவத் தொழில் செய்வோருக்குக் கடமை உள்ளது என்று இவ்வமைப்பினர் அறிவித்து இதை ஆரம்பித்தனர். பின்னர், உலக மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றுகூடி, அணுப் போரின் மருத்துவ மற்றும் அறிவியல் எதார்த்தங்களை பொது மக்களுக்கும், கொள்கை அமைப்பாளர்களுக்கும் அறிவித்து, உலக நாடுகளின் ஆயுதக் கிடங்குகளிலிருந்து அணு ஆயுதங்கள் அகற்றப்படுவதற்கு உழைக்க வேண்டும் என்றும் தீர்மானித்தனர். ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் ஏற்படுத்திய கடும் சேதங்கள் பற்றிய விபரங்களை இந்த கூட்டமைப்பைச் சார்ந்த ஜப்பானிய மருத்துவ வல்லுனர்கள் வழங்கினர்.

“அணு ஆயுதப் போரே மனித சமுதாயத்தின் இறுதி அழிவுக்குக் காரணமாக அமையும். இதில் பாதிக்கப்படும் மக்களுக்கு எவ்வித சிகிச்சையும் கிடையாது. மருத்துவ முறையில் பொருளுள்ள விதத்தில் இந்த எதிர்மறை விளைவுகளுக்குப் பதிலும் சொல்ல முடியாது” என்ற செய்தியை இந்த அனைத்துலக அமைப்பைச் சார்ந்த மருத்துவர்கள் உலகின் இலட்சக்கணக்கான மக்களிடம் பரப்பினர். இந்த அமைப்பு தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் மருத்துவர்கள், சோவியத் யூனியன் மருத்துவர்களோடு சேர்ந்து, அணு ஆயுதப் போரின் எதிர்மறை விளைவுகள் குறித்து நலவாழ்வுப் பணியாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பனிப்போரால் பிளவுண்டிருந்த இவ்விரு நாடுகளின் மருத்துவர்கள், இந்த நடவடிக்கையால் ஒன்று சேர்ந்தனர். இவர்களின் இம்முயற்சியைப் பாராட்டி, 1984ம் ஆண்டில் யுனெஸ்கோ நிறுவனத்தின் கல்வி விருது வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில் நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டது. தற்போது IPPNW அமைப்பில் 64 நாடுகளின் தேசிய மருத்துவக் குழுக்களைச் சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பிற நலவாழ்வுப் பணியாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகை அமைத்து, உலகில் அமைதியை உருவாக்குவதே இந்தக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் நோக்கமாகும்.

IPPNW கூட்டமைப்பு, 2007ம் ஆண்டில், அணு ஆயுதங்களை ஒழிக்கும் அனைத்துலக நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியது. உலக அளவில் அணு ஆயுதங்கள் தடை ஒப்பந்தம் கொண்டுவரப்படவும், அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படவும் முயற்சிகள் எடுப்பதற்கு மருத்துவ அரசு-சாரா அமைப்புகளை, இந்த IPPNW கூட்டமைப்பு வழி நடத்தி வருகிறது. IPPNW கூட்டமைப்பின் இம்முயற்சியில், எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் மனிதாபிமான, சுற்றுச்சூழல், மனித உரிமைகள், அமைதி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் என 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

1991ம் ஆண்டில் முன்னாள் சோவியத் யூனியன் கலைந்தது. அதோடு பனிப்போரும் முடிவடைந்தது. ஆயினும் அமெரிக்க ஐக்கிய நாடும், இரஷ்யாவும் ஏறக்குறைய 1,800 அணு ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்துள்ளன. அறிவிப்பு கொடுக்கப்பட்ட ஒருசில நிமிடங்களில் வெடிப்பதற்கு இவை தயார் என்று சொல்லப்படுகின்றது. இவற்றில் பல ஆயுதங்கள், 1945ம் ஆண்டில் ஜப்பானில் போடப்பட்ட அணுகுண்டுகளின் வீரியத்தைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தவை. இதில் ஓர் அணு ஆயுதம் ஒரு பெரிய நகரத்தில் பயன்படுத்தப்பட்டாலே இலட்சக்கணக்கில் மக்கள் இறப்பார்கள், அதன் பின்விளைவு பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும் என்றெல்லாம் அமெரிக்க அறிவியல் அறிக்கை ஒன்று எச்சரிக்கிறது.

அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் அவற்றை அழிக்கவில்லையெனில், மற்ற நாடுகளும் அவற்றைக் கொண்டிருக்க ஊக்கப்படுத்துவதாக அது அமையும். இன்று உலகில் ஒன்பது நாடுகள் 15 ஆயிரத்து 700 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன. அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் சில, அணு ஆயுதங்கள் அற்ற ஓர் உலகு குறித்த தங்களின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன. ஆனால், அவை தங்களிடம் இருக்கும் அந்த ஆயுதங்களை ஒழிப்பதற்கு எந்தத் தெளிவான திட்டங்களையும் செயல்படுத்தத் தவறியுள்ளன. மாறாக, அவற்றை நவீனமாக்கி வருகின்றன என்றும் ஊடகங்கள் குறை கூறுகின்றன. 

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், இரஷ்யாவுக்கும் இடையே அணுப்போர் மூண்டால், நகரங்களிலும் தொழிற்சாலைப் பகுதிகளிலும் அவற்றின் வெடிப்பினால் 15 கோடி டன்கள் புகை வெளியேறும். இந்தப் புகை விரைவாக உலகெங்கும் பரவும். வளிமண்டலத்தில் அடர்த்தியான புகைப் படலங்களை உருவாக்கும். இவை வளிமண்டலத்தில் பல ஆண்டுகளுக்கு இருக்கும். சூரிய ஒளியை 70 விழுக்காடு மறைக்கும். பூமிக்கு கறுப்பு ஒளி வரும். இதனால் பூமி 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பனிக்காலம் போன்று குளிர்ந்து இருக்கும். இப்படி பல எதிர்மறை விளைவுகளை அறிவியலாளர்கள் யூகித்துள்ளனர். அணு ஆயுத அச்சறுத்தல் அற்ற உலகை உருவாக்க நாடுகள் முன் வர வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆவல். அணு ஆயுத ஒழிப்பிலும், அமைதியை ஏற்படுத்துவதிலும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த அனைத்துலக அணுப் போர் தடுப்பு மருத்துவர்கள் அமைப்பில் சேரலாம்.

இயேசு சொன்னார் - அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர் (மத்.5,9)என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.