2015-06-09 15:38:00

வீடற்றவர் இரவில் தங்குவதற்கு திருத்தந்தையின் தர்ம அலுவலகம்


ஜூன்,09,2015. “தம்மையே வழங்கும் இறைவனை, திருநற்கருணை அருளடையாளத்தில் கண்டுகொள்கிறோம்” என்ற வார்த்தைகளை டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், உரோம் நகரில் வீடின்றி தெருவில் வாழ்பவர், இரவில் தூங்குவதற்கு இடம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தர்ம அலுவலகம்.

வீடில்லாமல் தெருவில் வாழ்பவர்களுக்கு, வத்திக்கானில் குளியல் அறை வசதி, முடிதிருத்தம் வசதி, உரோம் மத்திய இரயில் நிலையத்தில் சுடச்சுடச் சாப்பாடு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ள திருத்தந்தையின் தர்ம அலுவலகம், இவர்கள் இரவில் உறங்குவதற்கும் வத்திக்கானுக்கு அருகில் அமைத்துக் கொடுப்பதற்கு ஆவன செய்து வருகிறது.

இப்புதிய முயற்சி குறித்து இத்தாலிய ஆன்சா செய்தி நிறுவனத்திடம் பேசிய திருத்தந்தையின் தர்மச் செயல்களை அதிகாரப்பூர்வமாக ஆற்றும் போலந்து நாட்டைச் சார்ந்த பேராயர் Konrad Krajewski அவர்கள், இப்பணிகள் மனிதரின் மாண்புக்கு மதிப்பளிப்பதாய் உள்ளன என்று தெரிவித்தார்.

வத்திக்கானுக்கு அருகிலுள்ள Via dei ‎Penitenzieri பகுதியில் 30 படுக்கைகள் கொண்ட இடம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இரவு மட்டுமே தங்குவதற்குப் பயன்படுத்தப்படும் இவ்விடத்தைத் தன்னார்வப் பணியாளர்கள் கண்காணிப்பார்கள் என்று பேராயர் Krajewski அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.