2015-06-09 15:08:00

விவிலியத் தேடல் : மணமகளின் தோழியர் உவமை – பகுதி - 3


பல்வேறு நாடுகளில், பல்வேறு கலாச்சாரங்களில், திருமண நிகழ்வுடன் தொடர்புடைய வெவ்வேறு பழக்க வழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. இப்பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் பாரம்பரியக் காரணங்களும் சொல்லப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 'நிச்சயதார்த்தம்' என்ற சடங்கின்போது, மணமகளும், மணமகனும் ஒருவருக்கொருவர் மோதிரங்கள் அணிவிக்கும் சடங்கு இடம்பெறும். 13ம் நூற்றாண்டில் திருஅவைத் தலைவராக இருந்த திருத்தந்தை 3ம் இன்னொசென்ட் அவர்கள், இந்த வழக்கத்தை அறிமுகம் செய்தவர் என்று சொல்லப்படுகிறது.

மேலும், இந்த மோதிரம், இடது கையில், சுண்டுவிரலுக்கு அடுத்த விரலில் மாட்டப்படுவதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது, இடது கையில், இந்த விரலில் ‘காதல் நரம்பு’ (Vena amoris) உள்ளதென்றும், அந்த நரம்பு நேரடியாக இதயத்திற்குச் செல்லும் நரம்பு என்றும் நம்பப்பட்டதால், அவ்விரலில் நிச்சயதார்த்த மோதிரம் மாட்டப்பட்டது.

அதேபோல், பொதுவாக, திருமணங்களில் மாப்பிள்ளையின் இடது கரத்தைப் பிடித்தபடி பெண் நடந்துவருவது வழக்கம். பெண்ணின் கரம்பிடிக்கும் வாய்ப்பிற்காக ஆண்கள் சண்டைகளில் ஈடுபட்ட காலத்தை மனதில் கொண்டு இந்த வழக்கம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. போட்டியில் அல்லது சண்டையில் வென்ற ஆண்மகன், பெண்ணை இடது கையில் பிடித்தபடி செல்லும்போது, வலது கரம் சுதந்திரமாக இருந்தால்தான் தன் திருமணத்திற்கு எதிராக இன்னும் போரிட விரும்பி வருபவருடன் மணமகனால் போரிட ஏதுவாகும் என்று காரணம் சொல்லப்படுகிறது.

இவ்விதம், பல்வேறு நாடுகளில், பல்வேறு வடிவங்களில் பின்பற்றப்படும் திருமணப் பழக்க, வழக்கங்களில், இன்றளவும் நடைமுறையில் இருப்பது, 'மணமகளின் தோழியர்' மற்றும் 'மணமகனின் தோழர்கள்' என்ற வழக்கம். இந்த வழக்கம், உரோமையக் கலாச்சாரத்திலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. உரோமைய வழக்கத்தின்படி, ஓர் ஆணும், பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும்போது, அவர்களைச் சுற்றி, ஐந்து ஆண்களும், ஐந்து பெண்களும் அத்திருமணச் சடங்கில் கலந்துகொள்வர். மணமகளின் தோழியர் ஐவரும் மணமகளைப் போலவும், மணமகனின் தோழர்கள் ஐவரும் மணமகனைப் போலவும், உடையணிந்து இச்சடங்கில் கலந்துகொள்வர்.

உரோமையர்கள் பின்பற்றிவந்த இந்த வழக்கத்திற்குப் பின்னணியாகச் சொல்லப்படும் காரணம், சிறிது வேடிக்கையாக உள்ளது. அதாவது, திருமணச் சடங்கில், தீய ஆவிகள் அழைப்பின்றி நுழைந்துவிடும் என்று உரோமையர்கள் நம்பினர். அவ்விதம் நுழைந்துவிடும் ஆவிகள் மணமகன், மணமகள் யாரென்று தெரியாமல் குழம்பிப் போகவேண்டும் என்பதற்காகவே, ஒரே மாதிரி உடையணிந்து, ஒரே விதத்தில் தோற்றமளிக்கும் ஆறு ஆண்கள், மற்றும் ஆறு பெண்கள் திருமணச் சடங்கில் கலந்துகொண்டனர் என்று உரோமையக் கலாச்சார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உரோமைய ஆதிக்கத்தில் இருந்த இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும், இந்த வழக்கத்தின் எதிரொலிகள் இருந்திருக்க வாய்ப்புண்டு என்று விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், விவிலியத்தின் முதல் நூலான தொடக்க நூலிலிருந்து, 'மணமகளின் தோழியர்' என்ற வழக்கத்திற்கு விளக்கங்கள் தருகின்றனர்.

தொடக்க நூல், 29ம் பிரிவில், யாக்கோபு, தன் தாய் மாமன் லாபானின் இரு மகள்கள், லேயாவையும், ராகேலையும் மணக்கும் நிகழ்வு கூறப்பட்டுள்ளது. இவ்விருவருடன், சில்பா, பில்கா என்ற இரு பணிப்பெண்களை தாய் மாமன் லாபான், யாக்கோபுவுக்குக் கொடுத்தார் என்று தொடக்க நூல் 29ம் பிரிவில் (தொடக்க நூல் 29: 24, 29) நாம் வாசிக்கிறோம். திருமணமாகி, கணவரின் வீட்டுக்குச் செல்லும் மணப்பெண்ணுடன் துணையாகச் செல்லும் பணிப் பெண்கள் என்று துவங்கிய இந்த வழக்கம், நாளடைவில், மணமகளின் தோழியர் என்ற வழக்கமாக மறுவடிவம் பெற்றிருக்கும் என்பது ஒரு சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்து.

உரோமைய வழக்கமாக இருந்தாலும் சரி, இஸ்ரயேல் மக்களின் வழக்கமாக இருந்தாலும் சரி, 'மணமகளின் தோழியர்' என்ற வழக்கம் இயேசுவின் காலத்தில் வெகுவாக நடைமுறையில் இருந்ததால், அதை மையப்படுத்தி, இயேசு இவ்வுவமையைப் புனைந்துள்ளார்.

13 இறைச் சொற்றொடர்களைக் கொண்ட இவ்வுவமையை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் நாம் பொருள் தேட முயல்வோம். மணமகன், அல்லது மாப்பிள்ளை வருவதற்கு முன் நிகழ்ந்தது, மணமகன் வந்த வேளையில் நிகழ்ந்தது, அவர் வந்தபின் நிகழ்ந்தது என்ற மூன்று பகுதிகள் இவ்வுவமையில் இடம்பெற்றுள்ளன. முதல் 5 இறைச் சொற்றொடர்கள், மணமகனின் வருகைக்குமுன் நிகழ்ந்தவற்றைக் கூறுகின்றன:

மத்தேயு நற்செய்தி 25: 1-5

இயேசு தன் சீடர்களிடம் கூறியது: “அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம். மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வர, காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

மணமகளின் தோழியர் பத்துபேர் என்று தன் கதையை ஆரம்பித்த இயேசு, உடனடியாக, அவர்களின் ஒரு முக்கிய பண்பையும் இணைத்துச் சொல்கிறார். உவமையில் சொல்லப்படும் பத்துத் தோழியரில் ஐந்து பேர் முன்மதி உடையவர்கள், மற்ற ஐந்து பேர் அறிவிலிகள். இவ்விரு குழுவினரும் நடந்துகொண்ட விதமே, உவமையின் கருவாக அமைந்துள்ளது. முதலில், அறிவிலிகள் நடந்துகொண்ட விதத்தை அலசுவோம்.

மணமகளின் தோழியாக இருப்பதற்கு அழைப்பு வந்ததும், ஐந்து அறிவிலிகள் என்ன செய்திருப்பார்கள் என்பதை நான் இவ்வாறு கற்பனை செய்து பார்க்கிறேன். அந்த ஐவரும் தலைகால் புரியாத மகிழ்ச்சி. அடைந்திருப்பார்கள். உடனே, தாங்கள் என்னென்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டு, பட்டியல் ஒன்றை அவர்கள் தயாரித்திருப்பார்கள்.

தாங்கள் அணிந்து செல்லவேண்டிய உடை, நகைகள், அவற்றிற்குப் பொருத்தமாக வாங்க வேண்டிய காலணிகள் என்று தங்கள் தோற்றத்தைப் பற்றி ஒரு பட்டியல் தயாரித்திருப்பார்கள். அதேபோல் தாங்கள் எடுத்துச் செல்லும் விளக்கு எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் அந்த விளக்கைச் சுற்றி எத்தனை மலர்கள் வைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் அவர்கள் எண்ணிப் பார்த்திருப்பார்கள். அவர்கள் எண்ணத்தில் ஓடிய அந்தப் பட்டியலில் ஒரு முக்கியமான அம்சம் மறக்கப்பட்டது. அதுதான்... விளக்கெரியத் தேவையான எண்ணெய்...

அறிவிலிகளின் எண்ணங்களில் எழுதப்பட்ட இப்பட்டியலுக்கு முற்றிலும் மாறாக,  முன்மதியுடைய ஐந்து பெண்களும் திட்டமிட்டு, பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பார்கள். அவர்கள் பட்டியலில் 'விளக்கெரிவதற்குத் தேவையான எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்பது முதலாவதாகக் குறிக்கப்பட்டிருக்கும்.

அவசியங்களா? ஆடம்பரங்களா? எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திக்க உவமையின் முதல் பகுதி உதவுகிறது. இப்பகுதியை இன்னும் சிறிது ஆழமாக அலசுகையில், மற்றோர் அம்சமும் தெளிவாகிறது. மணமகன் வருவதற்கு காலம் தாழ்த்தப்பட்டது என்று இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. அந்த நேரத்திலாவது இந்த ஐந்து பெண்களின் எண்ண ஓட்டம் அலங்காரங்களிலிருந்து விடுபட்டு, அவசியத் தேவையான எண்ணெய் பக்கம் திரும்பியிருந்தால், தவறை இவர்கள் சரி செய்திருக்கலாம். பார்த்துப் பார்த்து அலங்காரங்கள் செய்ததால், உருவான சோர்வு அவர்களை ஆக்ரமித்ததால், அவசியமான எண்ணெயை அவர்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இந்தக் கவனக்குறைவால், அவர்கள் பங்கேற்க வந்திருந்த திருமண விழாவையே இழக்க வேண்டியிருந்தது.

தேவையானவை, தேவையற்றவை, அவசியமானவை, அவசியமற்றவை, அலங்காரங்கள், ஆடம்பரங்கள் என்று நம் வாழ்வை நிறைத்துவிடும் பல அம்சங்களில், தேவையானவற்றை, அவசியமானவற்றைப் பிரித்துப்பார்க்கும் பக்குவம், கண்ணோட்டம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்வோம்.

“தற்போது நான் அதிகம் 'பிசி'யாக இருக்கிறேன். பல முக்கியமான அலுவல்கள் உள்ளன. இந்தப் பாகுபாடுகளைச் சிந்திக்க எனக்கு நேரமும் இல்லை, மன நிலையும் இல்லை. வாழ்வின் இறுதி காலத்தில், மரணம் நெருங்கும் வேளையில் இந்த வேறுபாடுகளையெல்லாம் சிந்தித்துக் கொள்ளலாம்” என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டால், இயேசு, இவ்வுவமையின் இறுதியில் கூறும் வரிகள் நம்மைக் காப்பாற்ற வேண்டும்: “விழிப்பாயிருங்கள்; ஏனெனில் இறைவன் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”  (மத்தேயு நற்செய்தி 25: 13)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.