2015-06-08 15:56:00

திருத்தந்தை - சரயேவோ, ஒப்புரவின் அடையாளமாக உள்ளது


ஜூன்,08,2015. சரயேவோ திருத்தூதுப் பயணம் பற்றி இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தனக்கு இனிய வரவேற்பளித்த போஸ்னிய அரசு அதிகாரிகள் மற்றும் குடிமக்களுக்கு இதயம்நிறை நன்றியை மீண்டும் தெரிவிப்பதாகச் சொன்னார்.

மேலும், சரயேவோவில் பல இனங்களையும், பல மதங்களையும் கொண்ட மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்ததால் நூற்றாண்டுகளாக அந்நகர்  மேற்கின் எருசலேம் என்றழைக்கப்பட்டது. ஆனால் அண்மை ஆண்டுகளில் அந்நகர் கடும் போரின் அழிவின் அடையாளமாகவும் மாறியது. தற்போது சரயேவோ ஒப்புரவின் அடையாளமாக உள்ளது. அமைதி மற்றும் ஒப்புரவின் திருப்பயணியாக சரயேவோ சென்றேன். அந்நாட்டின் பல்வேறு இன மற்றும் மதக் குழுக்கள் நடந்துவரும் ஒப்புரவுப் பாதையில் தொடர்ந்து நடக்குமாறு ஊக்கப்படுத்தினேன், அந்நாட்டில் பல்வேறு மதத்தினர், உண்மையான சகோதர, சகோதரிகளாகப் பணி செய்கின்றனர். இவர்கள் மத்தியில் காணப்படும் ஒத்துழைப்பையும் ஒருமைப்பாட்டையும் பாராட்டுகிறேன், சமூகத்தின் ஆன்மீக மற்றும் நன்னெறி வாழ்வைத் தொடர்ந்து கட்டியெழுப்புமாறு மீண்டும் ஊக்கப்படுத்துகிறேன், போஸ்னியா-எர்செகொவினாவை இறைவன் ஆசிர்வதிப்பாராக என்று கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.