2015-06-08 16:02:00

திருத்தந்தை - உடன்பிறப்புப் பாலங்களாகச் செயல்படுங்கள்


ஜூன்,08,2015. அன்பு நேயர்களே, இன்றைய கடுகு சிறுத்தாலும் பகுதியில் நாம் கேட்டது போல, மனிதர்களை வெட்டும் தொழிலுக்கு அல்ல, மனிதர்களை ஒட்டும் வேலைக்கே இன்றைய உலகத்திற்கு ஆள்கள் அதிகம் தேவை. ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வெளியாகும் பல தடித்த எழுத்துச் செய்திகள், இந்த உலகுக்கு, அதிலும் போர் இடம்பெறும் மற்றும் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு, இப்படிப்பட்ட வேலைவாய்ப்புக்கு மனிதர்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றனர் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. ஜூன்,06, கடந்த சனிக்கிழமை சரயோவோ நகருக்கு ஒருநாள், திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் போஸ்னியா-எர்செகொவினா குடியரசு மக்களிடம், குறிப்பாக, இளையோரிடம் மனிதரைப் பிரிக்கும் சுவர்களை அல்ல, அவர்களை இணைக்கும் பாலங்களைக் கட்டுங்கள், இன்றைய உலகில் ஆட்சியில் உள்ள சிலர், அமைதி பற்றிய சுவையான காரியங்களைச் சொல்கின்றனர், பேசுகின்றனர், ஆனால் அவர்கள், ஆயுதங்களையும் விற்பனை செய்கின்றனர். இளையோரே, உங்களிடம் நான் நேர்மையை எதிர்பார்க்கிறேன் என்ற வேண்டுகோளையே முன்வைத்தார். சரயேவோ திருத்தூதுப் பயணத்தின் இறுதி நிகழ்வாக, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் மையத்தில் அந்நாட்டின் ஏறக்குறைய 800 இளையோரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்பில், கணனி, தொலைக்காட்சிகளைப் பயன்படுத்தல், இளையோர்மீது திருத்தந்தை கொண்டிருக்கும் பாசம், அமைதி ஆகிய மூன்று தலைப்புகளில் மூன்று இளையோர் பிரதிநிதிகள் கேள்விகளைக் கேட்டனர். அதற்குப் பதில் கூறிய திருத்தந்தை,

“நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. புவனோஸ் ஐரெஸ் நகரில் மறைப்பணியாற்றிய காலத்தில், தொலைக்காட்சியினால் எந்த நன்மையும் கிட்டுவதில்லை, அது என்னை, என்னிலிருந்து விலக்கிக் கொண்டு செல்வதாக, 1990களின் மத்தியில் ஓர் இரவில் உணர்ந்தேன். எனவே தொலைக்காட்சி பார்ப்பதில்லை என்று முடிவு செய்தேன். ஏதாவது ஒரு நல்ல திரைப்படம் பார்க்க விரும்பினால், புவனோஸ் ஐரெஸ் பேராயர் இல்லம் சென்று அதை மட்டும் பார்ப்பேன். நான் கற்காலத்தில்தான் வாழ்கிறேன், இக்காலம் உருவங்களின் காலம். எனினும், இக்காலத்திலும் இதனை புத்தகங்களில் காணலாம், ஆனால், இளையோரே, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நன்மை செய்யக்கூடியது எது என்று சிந்தித்து தேர்ந்து தெளிவது மிகவும் முக்கியம். நம் சமூகத்தின் விழுமியங்களுக்கு நன்மை செய்கின்ற, நம்மை முன்னோக்கி நடத்திச் செல்கின்ற நல்ல நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். இந்நிகழ்ச்சிகள் நம் வாழ்வை நல்வழிப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் வழி காட்ட வேண்டும். இது தொலைக்காட்சி நிறுவனங்களின் கடமை. அடுத்து, நல்ல நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பது நம் கடமை. மேலும், தீய கற்பனைகள் நம் ஆன்மாவைக் கொலை செய்கின்றன. இளையோராகிய நீங்கள், கணனிக்கு அடிமையாகி உங்கள் சுதந்திரத்தை இழக்கின்றீர்கள். கணனியில் இழிவான நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் உங்கள் மனித மாண்பை இழப்பீர்கள். தொலைக்காட்சியைப் பாருங்கள், கணனியைப் பயன்படுத்துங்கள், ஆனால் உங்களை வளர்த்தெடுக்கும் அழகான நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுங்கள். மேலும், உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், நான் இளையோரைச் சந்திக்கும்போது, அவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பையும், மகிழ்வையும் உணருகிறேன். என்மீது மட்டுமல்ல, கருத்தியல்கள்மீது, வாழ்வுமீது இளையோர் வைத்திருக்கும் அன்பையும் உணருகிறேன். அதில் வளர விரும்புகிறார்கள்”.

இவ்வாறு போஸ்னிய இளையோரின் கேள்விகளுக்குத் திருத்தந்தை பதில் சொல்லச் சொல்ல, திருத்தந்தையின் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்டுவந்த இளையோரும் பலத்த கைதட்டலுடன் வரவேற்றனர். போஸ்னியாவில் 1995ல் முடிவுற்ற கடும் போருக்குப் பின்னர் வாழும் இந்த இளையோர், அந்நாட்டின் முதல் தலைமுறை இளையோர் என்று குறிப்பிட்டு, அவர்களுக்கு முக்கியமான அழைப்பு ஒன்று உள்ளது என்பதை அழுத்தமாகச் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ். 

“போஸ்னிய இளையோராகிய நீங்கள் தனித்துவம் உள்ளவர்கள், நீங்கள் போருக்குப் பின்னர் வளர்ந்துவரும் முதல் தலைமுறை என்று நினைக்கிறேன். நீங்கள், வசந்தகால மலர்கள் போன்றவர்கள். ஒருவர் ஒருவரைப் பகைவர்களாக ஆக்கும் அழிவுச் செயல்களுக்குத் திரும்பாமல், முன்னோக்கி நடங்கள். உங்களில் இந்த ஆவலும், ஆர்வமும் இருப்பதைக் காண்கிறேன். நீங்கள் அழிவை விரும்பவில்லை, பகைவர்களாக இருக்கவும் விரும்பவில்லை, ஒன்று சேர்ந்து நடக்க விரும்புகிறீர்கள். நீங்கள் முஸ்லிம், யூதர், ஆர்த்தடாக்ஸ், கத்தோலிக்கர். ஆனால் நாம் அனைவரும் ஒன்றே. இந்த ஒன்றிப்பையே அமைதியும் ஆக்குகின்றது. உங்கள் தலைமுறைக்கு உரியது இதுவே. உங்களுக்குப் பெரியதோர் அழைப்பு உள்ளது. ஒருபோதும் சுவர்களைக் கட்டாதீர்கள், ஆனால் பாலங்களைக் கட்டுங்கள்! இந்த மகிழ்வை உங்களில் பார்க்கிறேன். அமைதி பற்றிய கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் முன்பு கூறியதையே சொல்வேன். ஒவ்வொருவரும் அமைதி பற்றிப் பேசுகின்றனர். இந்த உலகில் ஆட்சியாளர்கள் சிலர் அமைதி பற்றி இனிக்கப் பேசுகின்றனர், ஆனால் அவர்கள் ஆயுதங்களை வர்த்தகம் செய்கின்றனர். நீங்கள் நினைப்பதில், உணருவதில், செய்வதில் என்ற மூன்று செயல்களிலும் நேர்மையுடனும், உண்மையுடனும் நடங்கள். இதற்கு மாறானது வெளிவேடம். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலம் என்ற திரைப்படத்தை(Die Brücke) ஜெர்மன் மொழியில்  பார்த்தேன். பாலம், எப்படி எப்போதும் இணைக்கின்றது என்று பார்த்தேன். ஒருவர் ஒருவரை நோக்கிச் செல்வதற்குப் பாலம் பயன்படுத்தப்படாமல் இருக்கும்போதும், அது தடைசெய்யப்பட்ட பாலமாக இருக்கும்போதும், அது நகரின் அழிவாக மாறும்”.

இவ்வாறு கூறிய திருத்தந்தை, இதனாலே, போஸ்னியாவின் போருக்குப் பின்னான முதல் தலைமுறையாகிய உங்களிடம் சொல்கிறேன் : “உங்களிடம் நேர்மையை எதிர்பார்க்கிறேன், வெளிவேடத்தை அல்ல. ஒன்றிப்புப் பாலங்களைக் கட்டுங்கள். இதுவே ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்வதற்கு வாய்ப்பளிக்கும். இதுவே உடன்பிறப்பு உணர்வாகும். அமைதி உங்களோடு இருப்பதாக. ஒன்றிணைந்து அமைதியை ஏற்படுத்துங்கள். இதுவே நான் உங்களுக்கு விட்டுச் செல்லும் பணி. அமைதியை அனைத்து மதத்தினர் மத்தியிலும் ஏற்படுத்துங்கள். இளையோர் இக்காலத்தின் பொருளாதாரச் சவால்களை மட்டுமல்லாமல், மனிதர் குறித்த கண்ணோட்டம் முன்வைக்கும் சவால்களையும் சந்திக்க வேண்டும். வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து தப்பிச் செல்வதற்கு, மதுபானங்கள், போதைப்பொருள்கள், அல்லது வன்முறையையும் காழ்ப்புணர்வையும் போதிக்கும் கருத்தியல்களில் புகலிடம் தேடும் சோதனைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்” என்றும் இளையோரிடம் கூறினார். அதேபோல், இஸ்லாமிய, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ, யூத என, போஸ்னியா-எர்செகொவினா நாட்டின் பல்சமயப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதும், பல்சமய உரையாடல் என்பது வாழ்வைப் பகிர்ந்து கொள்வது, கடமைகள் பகிரப்படுவது பற்றிப் பேசுவது, ஒன்றிணைந்து வருங்காலத்தைத் திட்டமிடுவது என்று கூறினார். சரயேவோ பேராலயத்தில் அந்நாட்டின் அருள்பணியாளர், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோர் மற்றும் குருத்துவ மாணவர்களைச் சந்தித்த போதும், போரை வெற்றி கொள்ள வேண்டும், அதைப் பழிவாங்கும் உணர்வால் அல்ல, ஆனால், மன்னிப்பால் என்று கூறினார். சரயேவோ நகரில் ஒருநாள்தான் திருத்தந்தை செலவழித்தார் எனினும், போஸ்னிய மக்களில் ஆழமான நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இத்திருத்தூதுப் பயணம் பற்றி இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் பேசிய திருத்தந்தை,  தனக்கு இனிய வரவேற்பளித்த போஸ்னிய அரசு அதிகாரிகள் மற்றும் குடிமக்களுக்கு இதயம்நிறை நன்றியை மீண்டும் தெரிவிப்பதாகச் சொன்னார். மேலும், “சரயேவோவில் பல இனங்களையும், பல மதங்களையும் கொண்ட மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்ததால் நூற்றாண்டுகளாக அந்நகர்  மேற்கின் எருசலேம் என்றழைக்கப்பட்டது. ஆனால் அண்மை ஆண்டுகளில் அந்நகர் கடும் போரின் அழிவின் அடையாளமாகவும் மாறியது. தற்போது சரயேவோ ஒப்புரவின் அடையாளமாக உள்ளது. அமைதி மற்றும் ஒப்புரவின் திருப்பயணியாக சரயேவோ சென்றேன். அந்நாட்டின் பல்வேறு இன மற்றும் மதக் குழுக்கள் நடந்துவரும் ஒப்புரவுப் பாதையில் தொடர்ந்து நடக்குமாறு ஊக்கப்படுத்தினேன், அந்நாட்டில் பல்வேறு மதத்தினர், உண்மையான சகோதர, சகோதரிகளாகப் பணி செய்கின்றனர். இவர்கள் மத்தியில் காணப்படும் ஒத்துழைப்பையும் ஒருமைப்பாட்டையும் பாராட்டுகிறேன், சமூகத்தின் ஆன்மீக மற்றும் நன்னெறி வாழ்வைத் தொடர்ந்து கட்டியெழுப்புமாறு மீண்டும் ஊக்கப்படுத்துகிறேன், போஸ்னியா-எர்செகொவினாவை இறைவன் ஆசிர்வதிப்பாராக” என்று கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த ஒருநாள் திருத்தூதப் பயணத்தை நிறைவுசெய்து திரும்பிய விமானப் பயணத்தில், செய்தியாளர்கள், திருத்தந்தையிடம், அல்பேனியா, போஸ்னியா-எர்செகொவினா இப்படி குட்டி ஐரோப்பிய நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் காரணத்தைக் கேட்டனர். அதற்கு, “இந்த இரு சிறிய நாடுகளும் கடும் துன்பங்களை அனுபவித்தவை, எனவே அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தேன்” என்று திருத்தந்தை பதில் சொன்னார். பால்கன் பகுதி நாடுகளில் ஒன்றான அல்பேனியா, ஒரு காலத்தில் நாத்திக நாடு என்று அறிவிக்கப்பட்டிருந்த உலகின் ஒரே நாடாக இருந்தது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கம்யூனிச ஆட்சியில், அல்பேனியாவில் கிறிஸ்தவரும் பிற மதத்தவரும் கடும் துன்பங்களை அனுபவித்தனர். பால்கன் தீபகற்பத்தில், தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள போஸ்னியா-எர்செகொவினா நாடும், இருபதாம் நூற்றாண்டில் கடும் இனப்படுகொலைகளை எதிர்கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இது போஸ்னியா என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. முன்னாள் யூக்கோஸ்லாவிய கூட்டுக் குடியரசில் ஒன்றான இந்நாடு, இக்கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனிக் குடியரசாக இயங்கப்போவதை 1990ம் ஆண்டில் அறிவித்தது. இதனால் போஸ்னியாவிலிருந்த செர்பிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர், குரோவேஷிய கத்தோலிக்கர், போஸ்னிய முஸ்லிம்கள் ஆகிய மூன்று குழுக்களுக்கு இடையே சண்டை தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற இச்சண்டையில் முஸ்லிம்களுக்கு எதிராக செர்பியர்கள் சண்டையிட்டனர். இச்சண்டையில், நேட்டோ இராணுவம் தலையிட்டது. இதனால் குரோவேஷிய-முஸ்லிம் கூட்டுப்படை கடும் உயிர்ச் சேதத்தை எதிர்கொண்டது. மூன்று வார பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 1995ம் ஆண்டில் Daytonல் அமைதி ஒப்பந்தம் உருவானது. இந்த மூன்று இனங்களைச் சார்ந்த அரசுத் தலைவர்கள், எட்டு மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் அந்நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். ஆறுகளும், மலைகளும் மிகுந்து இயற்கை அழகால் நிறைந்துள்ள இந்நாட்டில், அமைதிக்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.

அன்பு நேயர்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போஸ்னிய இளையோரிடம் கூறியது அந்த இளையோருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும்தான். அமைதிப் பணி செய்யவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். பிரிவினைச் சுவர்களை அல்ல, உடன்பிறப்பு உணர்வு நிறைந்த பாலங்களைச் சமைப்போம். அத்தகைய பாலங்களாகச் செயல்படுவோம். கணனியைப் பயன்படுத்தும்போது, தொலைக்காட்சியைப் பார்க்கும்போது, நாம் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகள், வாழ்வுக்கு நன்மை தருவதாய் இருப்பதில் கவனம் செலுத்துவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.