2015-06-06 15:32:00

சரயேவோவில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயண நிகழ்வுகள்


ஜூன்,06,2015. சரயேவோ பன்னாட்டு விமான நிலையத்தை காலை 9 மணிக்குச் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, போஸ்னிய அரசுத் தலைவர்களில் குரோவேஷிய உறுப்பினரும், கத்தோலிக்கருமான Dragan Covic, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரும், Vrhbosna-Sarajevo பேராயருமான கர்தினால் Vinko Puljic, திருப்பீடத் தூதர் பேராயர் Luigi Pezzuto ஆகியோர் உட்பட, பலர் வரவேற்றனர். சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்த திருத்தந்தையை, வெண்மை நிறத்தில் பாரம்பரிய உடையணிந்த 150 சிறுவர், சிறுமியர் அணிவகுத்து வரவேற்றனர். இவர்கள் ஒவ்வொருவருடனும் கைகுலுக்கியத் திருத்தந்தை, அங்கு நின்றுகொண்டிருந்த விமான நிலையப் பணியாளவர்களையும் கைகுலுக்கி வாழ்த்தினார். இதனால் திருத்தந்தையின் அடுத்த நிகழ்வு ஆரம்பிக்க, 15 நிமிடம் தாமதமானது. சரயேவோ விமான நிலையத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குக் காரில் சென்றார். வழியெங்கும் மக்கள் பாப்பிறைக் கொடிகளுடன் நின்று திருத்தந்தையை வாழ்த்தினர். அச்சமயத்தில், சரயேவோ மற்றும் போஸ்னியாவின் அனைத்து ஆலய மணிகளும் ஒலித்துக் கொண்டிருந்தன. திருத்தந்தைக்கு அரசுத்தலைவர் மாளிகையில் அதிகாரப்பூர்வ வரவேற்புகள் இடம்பெற்றன. “அமைதி உங்களோடு இருப்பதாக” என்ற இத்திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கிற்கேற்ப, மாடப் புறாக்கள் பறக்க விடப்பட்டன. தற்போதைய செர்பிய அரசுத்தலைவர் Mladen Ivanic அவர்களை முதலில் தனியே சந்தித்தார் திருத்தந்தை. அழகான வண்ண வேலைப்பாடுகளுடன் நிறைந்த வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா படம் ஒன்றை அரசுத்தலைவர் Ivanic அவர்களுக்கு அளித்தார் திருத்தந்தை. பின்னர் அம்மாளிகையில் அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்தித்தார். முதலில் அரசுத்தலைவர் Mladen Ivanic அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.

பல்வேறு கலாச்சாரங்களையும் மதங்களையும் கொண்ட போஸ்னியா, அன்பு, கருணை, இன்னும் பிற நல்ல பண்புகளைக் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகள் மற்றும் மதங்கள் மத்தியில் உண்மையான அன்புக்கும்,  புரிந்துகொள்ளுதலுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவும் இந்நாடு உள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியா சந்திக்கும் ஓர் இடமாக எங்கள் நாடு உள்ளது. கடந்தகாலத் துன்பங்கள் மற்றும் நாங்கள் செய்த தியாகங்கள், அமைதி, சகிப்புத்தன்மை, சுதந்திரம் மற்றும் மாண்பு நிறைந்த ஒரு சமுதாயத்தை அமைப்பதற்குச் சவாலை முன்வைத்துள்ளன. அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றோம். ஐரோப்பிய ஒன்றியம், அனைத்து தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் கதவுகளைத் திறக்கும் என நம்புகிறேன். திருத்தந்தையின் இப்பயணம்  போஸ்னியா-எர்செகொவினா நாட்டினர் அனைவரையும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. பால்கன் பகுதியில் திருஅவைகளுக்கு உள்ள சுதந்திரத்தை அமல்படுத்திய முதல் நாடுகளில் ஒன்றாக போஸ்னியா உள்ளது. இத்திருத்தூதுப் பயணம் நாட்டு மக்கள் மத்தியில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் எனவும் நம்புகிறேன். திருத்தந்தையே, தங்களின் அமைதி, நம்பிக்கை மற்றும் ஒன்றிப்புச் செய்திக்கு நன்றி.  

அரசுத்தலைவர் இவ்வாறு உரையாற்றி முடித்த பின்னர், போஸ்னியா-எர்செகொவினாவிற்கான தனது முதல் உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முன்னாள் யுக்கோஸ்லாவிய கூட்டுக் குடியரசைச் சேர்ந்த போஸ்னியா-எர்செகொவினா, அக்கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, 1991ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை மூன்றரை ஆண்டுகள் கடும் சண்டையால் பாதிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டை, போஸ்னிய முஸ்லிம், குரோவேஷிய கத்தோலிக்கர், செர்பிய ஆர்த்தடாக்ஸ் என மூன்று இனங்களைச் சார்ந்த மூன்று பேர் கொண்ட அரசுத்தலைவர் குழு ஆட்சி செய்கின்றது.  எட்டு மாதங்களுக்கு ஒருமுறை இம்மூவரும் மாறி மாறி ஆட்சி செய்கின்றனர். போஸ்னியா என்று பொதுவாக அழைக்கப்படும் இக்குடியரசில், 40 விழுக்காட்டினர் போஸ்னிய முஸ்லிம்கள், 31 விழுக்காட்டினர் செர்பிய ஆர்த்தடாக்ஸ், மற்றும்  ஏறக்குறைய 15 விழுக்காட்டினர் குரோவேஷிய கத்தோலிக்கர்.

அரசுத்தலைவர் மாளிகையில் தனது பயண நிகழ்வை முடித்து, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Kosevo அரங்கத்திற்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை. இந்த அரங்கம், 1947ம் ஆண்டு திறக்கப்பட்டது. பின்னர், 14வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆரம்பம் மற்றும் நிறைவுக்காக, 1984ல் மீண்டும் இந்த அரங்கம் புதுப்பிக்கப்பட்டது. போஸ்னிய நாடு மலைகள் நிறைந்திருப்பதால், திருத்தந்தை காரில் சென்ற பகுதியெங்கும் மரங்கள் நிறைந்து பசுமையாய்க் காணப்பட்டது. மக்களும் சாலையின் இரு பக்கங்களிலும் நின்று திருத்தந்தையைக் கண்டு அவரின் வாழ்த்தையும், ஆசிரையும் பெற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.