2015-06-06 15:10:00

சரயேவோ – திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


ஜூன்,06,2015 அன்பு சகோதர, சகோதரிகளே,

அமைதி என்ற வார்த்தை, இன்றைய வாசகத்தில் அடிக்கடி எதிரொலித்தது. அமைதி என்பது, கடவுளின் கனவு, மனித குலத்திற்கு, படைப்பிற்கு, வரலாற்றிற்கு அவர் வகுத்த திட்டம். இத்திட்டத்திற்கு, மனிதர்களிடமிருந்தும், தீயவனிடமிருந்தும் எப்போதும் எதிர்ப்பு வந்துள்ளது. நாம் வாழும் இன்றைய உலகில் அமைதிக்கு எதிரான பல மோதல்களைக் காண்கிறோம். இவற்றை நாம் மூன்றாம் உலகப் போர் என்று ஒருவகையில் சொல்லக் கூடும்.

போர்கருவிகளை உற்பத்தி செய்வோர், இத்தகையப் போர்களை உருவாக்கி, வளர்ப்பதில் முனைப்பாக உள்ளனர். ஆனால், போர்களால் உயிர்களும், வாழ்க்கையும், வீடுகளும் சிதைக்கப்படுகின்றன. மக்கள், குறிப்பாக, வயது முதிர்ந்தோரும், குழந்தைகளும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறி, முகாம்களில் குடியிருக்கும் அவலத்திற்குத் தள்ளபடுகின்றனர். இங்கு கூடியிருக்கும் நீங்கள் அனைவரும், போரினால் விளையும் துன்பங்களை அனுபவித்தவர்கள். இன்று, அன்பு சகோதர, சகோதரிகளே, இந்நகரில் வாழும் நல்மனம் கொண்ட ஆண், பெண் அனைவரிடமிருந்தும் எழும் குரல் இதுதான்:  போர் இனி ஒருபோதும் வேண்டாம்!

போர் மேகங்கள் சூழ்ந்த இவ்வுலகில், "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" (மத்தேயு 5:9) என்ற சொற்கள், ஒளிக்கீற்றாக உதயமாகின்றன. இவை, எல்லா தலைமுறையினருக்கும் பொருந்தும் அர்த்தமுள்ள வார்த்தைகள். "அமைதியைப் பேசுவோர் பேறுபெற்றோர்" என்று இயேசு கூறவில்லை; ஏனெனில், அமைதியைப் பற்றி பேசுவோர் பலரை நாம் கண்டு வருகிறோம். எனவே, "அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்பதையே இயேசு கூறுகிறார். தங்கள் அனுதின வாழ்வில் அன்புநிறைச் செயல்கள், உரையாடல் வழியே அமைதியை விதைக்கும் நல்ல உள்ளங்கள் பேறுபெற்றோர்.

அமைதியை எவ்விதம் உருவாக்க முடியும் என்பதை இறைவாக்கினர் எசாயா நமக்கு அழகாக நினைவுறுத்துகிறார். "நீதியால் விளைவன என்றுமுள அமைதியும் நம்பிக்கையும்" (எசா 32:17) என்று அவர் கூறுகிறார். நீதியை நிலைநாட்டுவதன் வழி, அமைதியை உருவாக்க முடியும். அன்பினால் மட்டுமே நீதியை முழுமையாக நிலைநாட்ட முடியும் என்பதை நற்செய்தி கூறுகிறது. (மத். 22:39; உரோ. 13:9)

அமைதியை உருவாக்கும் மனநிலை குறித்து புனித பவுல் அடியார் இரண்டாம் வாசகத்தில் இவ்வாறு கூறுகிறார்:

நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். (கொலோசையர் 3:12-13)

இத்தகையக் குணநலன்களைக் கொண்டோர், அமைதியை உருவாக்க முடியும். ஆனால், இவை அனைத்தையும் நம் சொந்த முயற்சியால் செய்ய முடியும் என்று எண்ணுவது தவறு. அமைதி என்பது, இறைவனிடமிருந்து வரும் ஒரு கொடை. இக்கொடை, தானாக, ஒரு மந்திர வித்தையாக நம்மை அடைவது கிடையாது. ஒருவர் ஒருவரை மன்னித்து, ஒப்புரவு கொள்ளும்போது, இறைவனின் இக்கொடை நம்மை அடைகிறது.

அன்பு சகோதர, சகோதரிகளே, அன்னை மரியாவின் பரிந்துரையோடு நாம் இறைவனை வேண்டுவோம். எளிமையும், பொறுமையும் நிறைந்த மனதுடன், நீதிக்காகப் போராடும் வரத்தை, இறைவனிடம் வேண்டுவோம். கருணை உள்ளம் கொண்டோராய், அமைதியை விதைத்து, வளர்ப்போராய் வாழ, இறைவனை மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.