2015-06-06 15:18:00

சரயேவோ – அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


அன்பு நிறை அரசுத் தலைவர்களே, அதிகாரிகளே,

கடந்த நூற்றாண்டில் இரத்தம் தோய்ந்த மோதல்களைக் கண்டாலும், தற்போது உரையாடலிலும், அமைதியிலும் வளர்ந்துள்ள இந்நகருக்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. சரயேவோ நகரும், போஸ்னியா-ஹெர்சகொவினாவும் ஐரோப்பாவிற்கும், இவ்வுலகிற்கும் தனித்துவமிக்க அர்த்தம் தருகிறது. வெவ்வேறு மதங்களையும், கலாச்சாரங்களையும் பின்பற்றும் இந்நாட்டு மக்கள், பல நூற்றாண்டுகளாக, ஒருவர் மற்றொருவரைக் குறித்து சரியான புரிதல் இல்லாமல் துன்புற்றுனர்.

இந்நகரின் கட்டடக் கலையிலேயே வெளிப்படையான வேறுபாடுகள் தெரிகின்றன. தொழுகைக் கூடங்கள், கோவில்கள், மசூதிகள் ஆகியவை அருகருகே அமைந்த இந்நகரம், "ஐரோப்பாவின் எருசலேம்" என்றழைக்கப்பட்டது. இத்தனை வேறுபாடுகள் நடுவே, உரையாடல் வழி, தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன.

நம்மிடையே எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், சரி நிகர் மதிப்புடனும், பொறுமையுடனும் தொடர்புகளை மேற்கொண்டால், நம் வேறுபாடுகளைத் தாண்டி, ஒருங்கிணைய முடியும். இவ்வாறு செய்யும்போது, பழங்காலக் காயங்கள், எவ்வளவுதான் ஆழமாக இருந்தாலும், அவை குணமாகி, நம்பிக்கையுடன் எதிர்காலத்தைக் காணமுடியும்.

டேய்டன் (Dayton) அமைதி உடன்பாடு கையெழுத்திடப்பட்டு, ஈராண்டுகள் சென்று, புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் இந்நாட்டிற்கு வருகை தந்தார். அவரது வருகைக்குப்பின் 18 ஆண்டுகள் கழித்து, அமைதியின் பயணியாக நான் இங்கு வந்துள்ளேன்.

நல்மனதுடன் நீங்கள் அனைவரும் மேற்கொண்டு வரும் அனைத்து முன்னேற்ற முயற்சிகளும் மகிழ்வளிக்கின்றன. இருப்பினும், இவற்றுடன் நாம் நிறுத்திவிடக் கூடாது. இன்னும் அமைதியான, வளமான சமுதாயத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்நாட்டில் வாழும் குரோவேசியா, போஸ்னியா, செர்பியா நாட்டினர் மத்தியில் அமைதியும், நல்லுணர்வும் வளரவேண்டும். இஸ்லாமியர், எபிரேயர், கிறிஸ்தவர் மத்தியில் உடன்பிறந்தோர் உணர்வு தழைக்கவேண்டும்.

நம்மிடமுள்ள வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தி, வன்முறைகளைத் தூண்டிவிடும் சக்திகளை நாம் எதிர்த்து நிற்கவேண்டும். ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமைகளையும், மாண்பையும் மதித்து நடக்க, அனைவரும் பழகவேண்டும்.

பொறுப்புள்ள அரசியல் தலைவர்கள், தனி மனிதர்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கவும், காக்கவும் அழைக்கப்பட்டவர்கள். சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற உணர்வு, தலைவர்களால் உறுதி செய்யப்பட வேண்டும். அத்தகையச் சமத்துவம் உறுதியானால், அனைவரும் இன்னும் அதிக ஈடுபாட்டுடன், பொது வாழ்வின் மேம்பாட்டிற்கு உழைக்க முன்வருவர்.

போஸ்னியா-ஹெர்சகொவினாவின் இவ்வுலக முன்னேற்றத்திலும், நன்னெறி முன்னேற்றத்திலும், கத்தோலிக்கத் திருஅவை, தன் செபங்களாலும், பணிகளாலும் ஈடுபட்டுள்ளது.

வறியோர் மற்றும் அதிகத் தேவையில் இருப்போருக்கென உழைப்பதில், திருஅவை இன்னும் அதிக அர்ப்பண உணர்வுடன் செயலாற்றும்.

போஸ்னியா-ஹெர்சகொவினா நாடு, தன் வெற்றிப் பயணத்தில் தளராமல், முன்னேறிச் செல்லும் என்று திருப்பீடம் நம்பிக்கை கொள்கிறது. இறைவன், சரயேவோ மீதும், போஸ்னியா-ஹெர்சகொவினா மீதும் தன் அமைதியையும், வளமான வாழ்வையும் வழங்குமாறு செபிக்கிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.