2015-06-06 15:45:00

சரயேவோ திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது


ஜூன்,06,2015. போஸ்னியா-எர்செகொவினா, பால்கன் தீபகற்பத்தில் தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். போஸ்னியா என, பொதுவாக அழைக்கப்படும் இந்நாடு, வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் குரோவேஷியாவையும், கிழக்கில் செர்பியாவையும் தென்கிழக்கில் மொந்தெநெக்ரோவையும் எல்லைகளாக கொண்டுள்ளது. தெற்கில்  20 கி.மீ. அளவில் அட்டிரியாட்டிக் கடல் பகுதியையும், மலைகள் நிறைந்த புவியியல் அமைப்பையும் இந்நாடு கொண்டுள்ளது. மேலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும். நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ள இந்நாடு, முதல் உலகப் போருக்குப் பின்னர், தென் ஸ்லாவிய அரசுகளான செர்பியர்கள், குரோவேஷியர்கள், சுலோவேனியர்கள் ஆகியோருடன் இணைந்தது. பின்னர், இக்கூட்டரசு யுக்கோஸ்லாவியா எனவும் பெயரிடப்பட்டது. இதில் பல இன மற்றும் பல மதக் குழுக்கள் இருந்தன. இதுவே பின்னாளில் சண்டைக்கும் காரணமானது.

1990ம் ஆண்டில் குரோவேஷியாவும், சுலோவேனியாவும் தனிக் குடியரசுகளாக இயங்கப்போவதை அறிவித்தன. இதைத் தொடர்ந்து போஸ்னியாவும் அறிவித்தது. இதனால் போஸ்னியாவிலிருந்த செர்பியர்கள், குரோவேஷியர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று குழுக்களுக்கு இடையே சண்டை தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற சண்டையில் முஸ்லிம்களுக்கு எதிராக செர்பியர்கள் சண்டையிட்டனர். இது 20ம் நூற்றாண்டில் இடம்பெற்ற பெரும் இனப்படுகொலைகளில் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது. இச்சண்டையில், நேட்டோ இராணுவத் தலையீட்டையடுத்து குரோவேஷிய-முஸ்லிம் கூட்டுப்படை கடும் உயிர்ச் சேதத்தை எதிர்கொண்டது. பின்னர் மூன்று வார பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைதி ஒப்பந்தம் உருவானது. அமைதி ஒப்பந்தத்தை மேற்பார்வையிட அறுபதாயிரம் நேட்டோ படைகள் அமர்த்தப்பட்டன. இன்று வரை 2 இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர், 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். 2 இலட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர் என்று சொல்லப்பட்டுள்ளது. போஸ்னியப் போர், 1930களுக்குப் பின்னர் மேற்கு உலகத்தின் பெரும் தோல்வி என்று அமெரிக்கச் செயலர் Richard Holbrooke அவர்கள் கூறியுள்ளார்.       

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.