2015-06-05 15:44:00

தெகோனியன்களிடம் திருத்தந்தை-கருணைக்குச் சாட்சி சொல்லுங்கள்


ஜூன்,05,2015. இயேசுவின் திருஇதய அருள்பணியாளர்கள் சபையின் பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் 120 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சபையினர், கருணையுள்ளவர்களாக வாழுமாறு கேட்டுக்கொண்டார்.

Dehoniani என அழைக்கப்படும் இச்சபைப் பிரதிநிதிகளை, வத்திக்கானின் Concistoro அறையில் சந்தித்த திருத்தந்தை, தன்னலம், வெறுப்பு மற்றும் அதிகாரத்தால் காயமடைந்துள்ள இக்கால உலகுக்கு, இறைவனின் கருணை தேவைப்படுகின்றது என்றும், இச்சபையினர் இரக்கமுள்ளவர்களாகச் செயல்படுமாறு நம் ஆண்டவர் கேட்கிறார் என்றும் கூறினார்.

நம் ஆண்டவர் பாவிகளைப் பார்த்து அச்சம் கொள்ளவில்லை, ஆனால், அவர் அவர்களோடு உணவருந்தச் சென்றார், எனவே, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோரும் இறைவனின் இரக்கத்திற்குச் சான்று பகர வேண்டுமெனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நான் செய்த பெரிய காரியங்கள் திருத்தந்தைக்குத் தெரியாமல் இருக்கலாம் என்று உங்களில் சிலர் நினைக்கக் கூடும், உங்களில் யாரும் இப்படிச் செய்திருந்தால் இயேசு தமது பெரும் கருணையால் உங்களுக்குப் பெரிய விழா எடுப்பார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த உலகம் காயமடைந்துள்ளது, நிறைய நோய்களால் நோயுற்றுள்ளது, எனவே இறைவனின் கருணை தேவைப்படுகின்றது என்று கூறிய திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும்போது கருணைப் பண்பை தயவுகூர்ந்து வெளிப்படுத்துங்கள் என்றும் Dehoniani சபையினரிடம் கேட்டுக்கொண்டார்.

இயேசுவின் திருஇதய அருள்பணியாளர்கள் சபையின் தலைவர் Heiner Wilmer அவர்கள், இந்நிகழ்வில் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.