2015-06-05 16:01:00

திருத்தந்தை - நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாடு


ஜூன்,05,2015. இறைவனின் உடன்படிக்கை முத்திரையாகிய திருநற்கருணை, கிறிஸ்தவர்களை, அவர்கள் விசுவாசத்திற்காக உயிரைக் கையளிக்க வைக்கும் சூழல்களில்கூட, அவர்களை ஒன்றிணைத்து இறையன்பை பிறருக்கு வழங்குவதற்கு வலிமை தருகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

உரோம் புனித ஜான் லாத்தரன் பசிலிக்கா வளாகத்தில், இவ்வியாழன் மாலை  கிறிஸ்துவின் திருஉடல் இரத்தம் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, திருஅவையும், அதன் உறுப்பினர்களும் திருநற்கருணை மீது ஆழ்ந்த பக்தியில் வாழ்வது ஒருபோதும் முடிவுறாது என்று தனது மறையுரையில் கூறினார்.

இத்திருப்பலிக்குப் பின்னர் அங்கிருந்து புனித மேரி மேஜர் பசிலிக்காவுக்குத் திருநற்கருணை பவனியும் நடைபெற்றது. "SCV 1" என்ற வத்திக்கான் அனுமதி எண் பொறிக்கப்பட்ட வாகனத்தில் திருநற்கருணை வைக்கப்பட்டு இரு தியாக்கோன்கள் முழந்தாளிட்டபடி சென்றனர்.  பொதுவாக, "SCV 1" வத்திக்கான் வாகன அனுமதி எண் திருத்தந்தையரின் வாகனத்துக்குரியது.

திருநற்கருணை பவனி தொடங்கியவுடன், கடந்த ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காரில் புனித மேரி மேஜர் பசிலிக்கா சென்று அங்குப் பவனியாக அழைத்துச் செல்லப்பட்ட நற்கருணை ஆண்டவரை வரவேற்றார். எண்ணற்ற விசுவாசிகள் கையில் எரியும் மெழுகுதிரிகளுடன் இப்பவனியில் கலந்து கொண்டனர். புனித மேரி மேஜர் பசிலிக்காவுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இறுதி திருநற்கருணை ஆசிரும் அளித்தார் திருத்தந்தை.

திருநற்கருணை பவனியில், விசுவாசிகள் ஆண்டவரோடு நகரத் தெருவில் நடந்து செல்லும்போது, நம் ஆண்டவர் இயேசுவை பொதுவில் அறிவிக்கும் சுதந்திரத்தை இழந்துள்ள சகோதர சகோதரிகளை நினைவுகூருமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ விசுவாசத்திற்காக நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுடன் ஒன்றிணைந்து ஆண்டவரைப் போற்றிப் பாடுவோம், வணங்குவோம் என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவுக்காகத் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்யுமாறு கேட்கப்படும்  கிறிஸ்தவர்களை நம் இதயங்களில் வைத்து வணங்குவோம் என்றும் கூறினார்.

நசுக்கப்படும் கிறிஸ்தவர்களின் இரத்தம் உலகம் முழுவதன் அமைதி மற்றும் ஒப்புரவுக்கு உறுதி தருவதாய் இருக்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்துவின் திருஉடலை உணவாகவும், அவரின் திருஇரத்தத்தைப் பானமாகவும் அருந்துதல் பற்றிக் கூறும் இப்பெருவிழா வாசகம் பற்றியும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரிவினையும், துணிவை இழப்பதும் ஆபத்தானது, ஆனால் கிறிஸ்துவின் இருப்பு, இவற்றை எதிர்கொள்வதற்கு நமக்கு வல்லமை தருகின்றது   என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.