2015-06-05 15:34:00

திருத்தந்தை, சிலே அரசுத்தலைவர் Bachelet சந்திப்பு


ஜூன்,05,2015. சிலே நாட்டு அரசுத்தலைவர் Michelle Bachelet Jeria அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Paul Gallagher ஆகியோரையும் இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.

தென் அமெரிக்க நாடான சிலே நாட்டுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் பற்றியும், மனித வாழ்வைப் பாதுகாத்தல், கல்வி, சமூக அமைதி போன்ற பொதுநல விவகாரங்கள் பற்றியும் இத்தலைவர்கள் இச்சந்திப்புகளில் கலந்துரையாடினர்.

மனித முன்னேற்றம், மக்களின் உருவாக்கம், அதிகத் தேவையில் இருப்போருக்கு உதவி போன்ற சிலே கத்தோலிக்கத் திருஅவையின் குறிப்பிடத்தக்க நற்பணிகள் பற்றியும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டன.

இலத்தீன் அமெரிக்காவின் இன்றைய நிலை குறித்தும், அக்கண்டம் எதிர்கொள்ளும் சில குறிப்பிட்ட சவால்கள் குறித்தும், உலகில் நிலவும் ஏழ்மை, குடும்பங்கள் நிலை, சமூக சமத்துவமின்மை போன்றவை குறித்தும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது. 

மேலும், இத்தாலிய ENI வாயு நிறுவன நிர்வாகப் பிரதிநிதி Claudio Descalzi அவர்கள் தனது குடும்பத்தினருடன் திருத்தந்தையை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.