2015-06-04 15:22:00

திருத்தந்தையின் சுற்றுச்சூழல் சுற்றுமடல், ஜூன் 18 வெளியாகும்


ஜூன்,04,2015 சுற்றுச்சூழலை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள சுற்றுமடல், ஜூன் 18, வியாழனன்று வெளியாகும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

இச்சுற்றுமடலைக் குறித்த ஏனைய விவரங்களை, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அடுத்தவாரம் வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் ஊடகங்களில் கூறப்பட்டு வரும் பல்வேறு செய்திகளுக்கு பதிலிறுக்கும் விதமாக, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் இவ்வியாழன் மதியம் இச்செய்தியை வெளியிட்டது.

மேலும், ஜூன் 10, வருகிற புதன், பிற்பகல், இரஷ்ய அரசுத் தலைவர், விளாடிமீர் புடின் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் சந்திப்பார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதெரீக்கோ லொம்பார்தி அவர்கள், இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மிலான் நகரில் நடைபெற்றுவரும் கண்காட்சியைக் காண வருகை தரும் இரஷ்ய அரசுத் தலைவர், விளாடிமீர் புடின் அவர்கள், தன் இத்தாலிய வருகையின்போது, இத்தாலிய அரசுத் தலைவர் Sergio Mattarella அவர்களையும், பிரதமர் Matteo Renzi அவர்களையும் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதி, இரஷ்ய அரசுத் தலைவர் புடின் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முதன் முறையாக வத்திக்கானில் சந்தித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

"நம்மில் மிகவும் நலிந்தோருடன் இறையரசை நோக்கி நடப்பதும், பேறுபெற்றோர் என்று இயேசு காட்டிய ஒளியில் இவ்வுலகைக் கட்டியெழுப்புவதும் இன்றையத் தேவை" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வழங்கிய Twitter செய்தியாக அமைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.