2015-06-03 16:35:00

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி–போர்,எல்லா ஏழ்மைகளின் தாய்


ஜூன்,03,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வி போதகத்தைக் கேட்பதற்காக, இப்புதன் காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் பல நாடுகளின் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் மற்றும் பயணிகள் அமர்ந்திருந்தனர்.   வருகிற அக்டோபரில் குடும்பம் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தைக் கண்முன் கொண்டு குடும்பத்தையொட்டி பல தலைப்புகளில் தனது புதன் மறைக்கல்வி போதகத்தை வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று குடும்பமும், ஏழ்மையும் என்ற தலைப்பில் பல மொழிகளில் தனது சிந்தனைகளை வழங்கினார்.

அன்புச் சகோதர, சகோதரிகளே, தங்கள் வாழ்வில் பல்வேறு துன்பங்களை எதிர்கொள்ளும் குடும்பங்கள் குறித்து, இன்றிலிருந்து நம் மறைக்கல்விகளில் சிந்திப்போம். எண்ணற்ற குடும்பங்களைத் துன்புறுத்தும் நிலைகளில் ஏழ்மையும் ஒன்று. இத்தகைய மிகவும் இன்னல் நிறைந்த சூழல்களிலும், ஏன், போரினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்ட நிலையிலும், இக்குடும்பங்கள், இறைவனின் நன்மைத்தனத்துக்குத் தங்களை அர்ப்பணித்து, எப்படியெல்லாம் தங்களின் மாண்பைக் காக்கின்றன! உண்மையில், போர், எல்லா ஏழ்மைகளின் தாய். மிகக் கடும் துன்பங்கள் நிறைந்த நிலைகளிலும்கூட குடும்பங்கள் தொடர்ந்து உருவாகி, நிலைத்து நிற்கின்றன என்பது புதுமையே. நமது நவீனப் பொருளாதாரங்கள், பல நேரங்களில், குடும்பங்களின் பாதிப்பு பற்றி கவலைப்படாமல், தனியாட்களின் நலனை ஊக்குவிப்பது வருத்தம் தருகின்றது.  எனினும், கிறிஸ்தவர்கள் என்ற முறையில், குடும்பங்களை, குறிப்பாக, ஏழைக் குடும்பங்களை உறுதிப்படுத்தி ஆதரவு வழங்கும் வழிகளை நாம் எப்போதும் தேட வேண்டும். திருஅவை ஓர் அன்னையாக, தனது பிள்ளைகளின் துன்பங்களுக்கு ஒருபொழுதும் தனது கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது. எனவே, அனைத்துத் துன்பங்களையும், குறிப்பாக, வறுமையையும், பிரிவினைச் சுவர்களையும் தகர்க்கும் பொருட்டு, தனி மனித வாழ்விலும், நம் நிறுவனங்களிலும் நாம் ஒவ்வொருவரும், எளிமையான வழிகளைத் தேர்ந்து கொள்ள வேண்டும். ஏழ்மையான திருஅவை, தேவையில் இருக்கும் தனது பல பிள்ளைகளுக்குப் பலன்களை நல்கும். உலகெங்கும் இருக்கின்ற கிறிஸ்தவக் குடும்பங்கள் தங்களின் ஏழைச் சகோதர சகோதரிகளுக்கு உதவுவதற்குத் தங்களை உண்மையாகவே அர்ப்பணிப்பதற்கு மனமாற்றம் அடையுமாறு அருள் வேண்டிச் செபிப்போம்.

குடும்பமும், ஏழ்மையும் என்ற தலைப்பில், தனது புதன் மறைக்கல்வி போதகத்தை இவ்வாறு நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீனாவின் Yangtze ஆற்றில் கப்பல் கவிழ்ந்ததில், பலியான மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார். இதில் பலியானவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லாருக்காவும் செபிப்போம் என்றும் கூறினார். பின்னர், அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.