2015-06-03 17:19:00

கடத்தப்பட்ட குருவை விடுவிக்க முஸ்லிம் தலைவர்கள் விண்ணப்பம்


ஜூன்,03,2015 சிரியா நாட்டில், மே 21ம் தேதி கடத்தப்பட்ட அருள்பணியாளர் Jaques Murad அவர்களை விடுவிக்கக் கோரி, சிரியாவின் இஸ்லாமியத் தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

புனித எலியாஸ் துறவு மடத்தில் வாழ்ந்துவந்த அருள்பணி Murad அவர்கள், இஸ்லாமிய-கிறிஸ்தவ மதங்களிடையே உரையாடலையும் ஒப்புரவையும் வளர்க்க அரும்பாடு பட்டவர் என்பதைக் குறிப்பிடும் இஸ்லாமியத் தலைவர்கள், அவரது விடுதலைக்காக விண்ணப்பித்துள்ளனர் என்று ZENIT கத்தோலிக்க செய்தி குறிப்பிட்டுள்ளது.

2013ம் ஆண்டு, ஜூலை 29ம் தேதியன்று கடத்தப்பட்ட அருள்பணி Paolo Dall'Oglio அவர்கள் இணைந்திருந்த அதே துறவு மட அமைப்பைச் சேர்ந்தவர், அருள்பணி Murad என்பதும், கடந்த 10 ஆண்டுகளாக அவர் உரையாடல், ஒப்புரவு, செபம் ஆகிய பணிகளில் மட்டுமே ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கவை.

அருள்பணி Murad அவர்களின் கடத்தல் ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது என்று கருதப்பட்டாலும், அவரது விடுதலைக் குறித்த நம்பிக்கை இன்னும் குறையவில்லை என்று இஸ்லாமிய மதத் தலைவர்கள் கூறிவருகின்றனர்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.