2015-06-03 17:05:00

அபுதாபியில் இரண்டாவது கத்தோலிக்க ஆலயம் திறப்பு விழா


ஜூன்,03,2015 ஐக்கிய அரபு எமிரேட்ஸின், அபுதாபியில், ஜூன் 11, வருகிற விழாயனன்று, இரண்டாவது கத்தோலிக்க ஆலயம் ஒன்றின் திறப்பு விழாவில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கலந்துகொள்வார் என்று மேற்கு அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகியின் அலுவலகம் அறிவித்துள்ளது.

1965ம் ஆண்டு, அபுதாபியில் புனித யோசேப்பு ஆலயம், அப்பகுதியின் முதல் கத்தோலிக்க ஆலயமாக நிறுவப்பட்டது. அந்நிகழ்வின் 50ம் ஆண்டு நிறைவில், இரண்டாவது கத்தோலிக்க ஆலயம், திருத்தூதர் புனித பவுல் அடியாரின் பெயரால் நிறுவப்பட்டுள்ளது.

அபுதாபியின் தொழிற்சாலைகள் பல அமைத்துள்ள Musaffah மாவட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் புனித பவுல் ஆலயம், தொழிற்சாலைகளில் பணிபுரிய வேற்று நாடுகளிலிருந்து வந்துள்ள கத்தோலிக்கர்களை மனதில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்று அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகியின் அலுவலகத்தின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

அரேபிய நாடுகளில் காலடி பதித்ததாகக் கருதப்படும் புனித பவுல் அடியாரின் பெயரால் நிறுவப்பட்டுள்ள இவ்வாலயம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இளையோர் பணித்துறை அமைச்சர், Sheikh Nayhan அவர்களால் ஜூன் 11ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.