2015-06-03 16:55:00

UNESCOவில் பங்கேற்ற முதல் பிரதிநிதி, புனித 23ம் யோவான்


ஜூன்,03,2015 UNESCOவின் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற முதல் பிரதிநிதி, இன்று கத்தோலிக்கத் திருஅவையால் புனிதரென போற்றப்படும் திருத்தந்தை 23ம் யோவான் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

1945ம் ஆண்டு உருவாக்கப்பட்ட UNESCO நிறுவனம் தன் 70ம் ஆண்டு நிறைவை, இவ்வாண்டு கொண்டாடிவருகிறது.

இக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜூன் 3, பாரிஸ் மாநகரில் UNESCO இல்லத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், கத்தோலிக்கக் கல்வி திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால், Zenon Grocholewski அவர்கள் உரையாற்றுகையில், ஜூன் 3ம் தேதி, புனிதத் திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் இறையடி சேர்ந்த 52ம் ஆண்டு நிறைவு என்பதையும் தன் உரையில் குறிப்பிட்டார்.

2ம் உலகப் போரினால் குழந்தைகளுக்கு விளைந்த எதிர்மறை பாதிப்புக்களைச் சீரமைக்க, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNESCO உருவானது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Grocholewski அவர்கள், கடந்த 70 ஆண்டுகளாக, UNESCO அமைப்பு, குழந்தைகளுக்கு ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.

புனிதத் திருத்தந்தை 23ம் யோவான், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 6ம் பவுல் ஆகியோர் உட்பட, திருஅவையின் தலைவர்களாக, கடந்த 50 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்துத் திருத்தந்தையரும், குழந்தைகள் நலனில், குறிப்பாக, அவர்களது கல்வியில் அதிக ஆர்வம் காட்டிவந்தனர் என்பதை, கர்தினால் Grocholewski அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.