2015-06-02 15:21:00

வெனெசுவேலா அரசும்,எதிர்க்கட்சியும் உரையாடலைத் தொடங்க..


ஜூன்,02,2015. வெனெசுவேலா நாட்டில் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவரும் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணிகள் நடைபெற்றுவரும் இவ்வேளையில், அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்நாட்டுத் திருஅவை அதிகாரி ஒருவர்.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு ஆதரவாக, நாட்டின் பல்வேறு நகரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் பேரணிகளை நடத்திவருவதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள கரகாஸ் கர்தினால் Jorge Urosa Savino அவர்கள், வெனெசுவேலா அரசுத்தலைவர் Nicolàs Maduro அவர்களின் அரசும், எதிர்க்கட்சியும் உரையாடலில் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் நிலைமை கவலை தருவதாக உள்ளது என்றும், தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியைக் களைவதற்கு உரையாடல் இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார் கர்தினால் Urosa.

தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில், சிறையிலுள்ள Leopoldo Lopez, Daniel Ceballos ஆகிய இரு எதிர்க்கட்சித் தலைவர்களும் கடந்த மே 23ம் தேதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வெனெசுவேலாவின் தேசிய தேர்தல் ஆணையம் இவ்வாண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தேதியை அறிவிக்கும் வரைக்கும், அந்நாட்டின் 79 அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படும் வரைக்கும் இப்போராட்டம் தொடரும் என கூறப்படுகின்றது.

இதற்கிடையே, வெனெசுவேலாவில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு, அமெரிக்கா மற்றும் இஸ்பெயின் நாடுகளின் 27 முன்னாள் அரசுத்தலைவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.