2015-06-02 15:55:00

மெலானோமா தோல் புற்றுநோய்க்குப் புதிய மருந்து


ஜூன்,02,2015. புற்றுநோய்க்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்து, முற்றிய தோல் புற்றுநோயைக் குணமாக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோயைக் குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேறான மருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுத்தபோது, Melanoma எனப்படும் முற்றிய தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக ஆய்வாளர்கள் மேலும் கூறுகின்றனர்.

பன்னாட்டு அளவில் 945 நோயாளிகளிடம் பரிசோதனை முறையில் நடத்தப்பட்ட இந்த சிகிச்சை முறையில்(ipilimumab, nivolumab மருந்துகள்) ஏறக்குறைய ஓராண்டில் 58 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தில் பிரித்தானிய ஆய்வாளர்கள் தங்களின் இந்தக் கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்துள்ளனர்.   

immunotherapy எனப்படும் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி மூலம் புற்றுநோயை எதிர்க்கும் சிகிச்சை முறைக்கு இந்த மருந்துகள் உதவுகின்றன. அதாவது, ஒருவரின் உடலில் இயல்பிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புக் கட்டமைப்பு சொந்த உடலிலுள்ள திசுக்களையே தாக்குவதை தடுப்பதற்கு இந்த மருந்துகள் பயன்படுகின்றன.

Melanoma எனப்படும் முற்றிய தோல் புற்றுநோயால் பிரிட்டனில் ஓராண்டில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் இறக்கின்றனர்.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.