2015-06-02 15:40:00

சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களால் $282 பில்லியன் இழப்பு


ஜூன்,02,2015. சிறார்க்கு எதிரான உரிமை மீறல்கள் மற்றும் சிறார் புறக்கணிப்படுவதால் கிழக்கு ஆசியாவிலும், பசிபிக் பகுதியிலும் ஆண்டுக்கு 20 ஆயிரத்து 900 கோடி டாலர் இழப்பு ஏற்படுகின்றது என்று பொருளாதார ஆய்வாளர்கள் இச்செவ்வாயன்று தெரிவித்தனர்.

சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களால் கிழக்கு ஆசியாவிலும், பசிபிக் பகுதியிலும் ஏற்படும் பொருளாதார இழப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவ்விழப்பு, அப்பகுதியின் உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காட்டுக்குச் சமமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசியாவிலும், பசிபிக் பகுதியிலும் இடம்பெறும் சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களால், சிறாரின் கல்வி, நீண்டகால உடல் மற்றும் மன நலம், வேலை செய்யும் திறமை போன்றவை பாதிக்கப்படுகின்றன, மேலும், வயது வந்தபிறகு வன்முறையிலும், குற்றங்களிலும் ஈடுபட வைக்கின்றன எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சரியான தடுப்பு நடவடிக்கைகள் மூலம், சிறார் தவறாக நடத்தப்படுவதிலிருந்து 50 விழுக்காடு குறைக்க முடியும் என்று கூறும் யூனிசெப் நிறுவன அதிகாரி Daniel Toole அவர்கள், சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களால் உலகில் நலவாழ்வு அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக கிழக்கு ஆசியா உள்ளது.  

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.