2015-06-01 15:29:00

வாரம் ஓர் அலசல் – உயிர்க்கட்டும் மனிதங்கள்


ஜூன்,01,2015. சிவாவுக்குப் பண நெருக்கடி. கவலையுடன் வீட்டில் இருந்த அன்று, பெரிய தொழிலதிபர் மாணிக்கம், சிவாவைத் தொலைபேசியில் அழைத்தார். சிவா, எங்கே இருக்கிறீங்க, நான் உங்கள்ட்ட ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும், உடனே புறப்பட்டு வாங்க என்று சொன்னார், ஐயா, நான் வீட்லதான் இருக்கேன், உடனே வர்றேன் என்று சொல்லி இரண்டு சக்கர வாகனத்தில் புறப்பட்டார்  சிவா. அடடா.. நம்ம கஷ்டத்தில இருக்கிறோம்னு கடவுளா பார்த்து இப்படி ஓர் ஆளை அனுப்பி நமக்கு உதவுறார் என்று எண்ணியபடி வண்டியை ஓட்டினார் சிவா. வழியில் ஓரிடத்தில் கசகசவென கூடியிருந்த ஒரு கூட்டத்தைப் பார்த்து தனது வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தார். அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவர் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அங்கே நின்ற கூட்டம், எதுவும் செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அய்யோ.. அங்கே ஐயா வேற காத்துக்கிட்டு இருக்காரே. அவர் கொடுக்கறதா சொன்ன பணத்தை வச்சுத்தான் இன்னைக்கு சில காரியங்களை முடிக்கலாம்னு நினைச்சோமே என்று ஒரு நிமிடம் நினைத்த சிவா, சரி, இந்தச் சிறுவர் யாருனு தெரியல, நாமளே மருத்துவமனையில சேர்த்துடுவோம் என்ற முடிவுக்கு வந்தார். அவ்வழியே சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி, யார் உதவிக்கும் காத்திராமல் அந்தச் சிறுவரைத் தூக்கி ஆட்டோவில் கிடத்தி மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்தார் சிவா. அப்போது மாணிக்கம், சிவாவை தொலைபேசியில் மீண்டும் அழைத்தார். மன்னிக்கனும் ஐயா. வரும் வழியில் ஒரு விபத்து,  ஒரு சிறுவர் அடிபட்டு கிடந்தார். அவரை அப்படியே போட்டுட்டு வர மனசு வரல. அதான் மருத்துவமனைக்கு கொண்டுவந்தேன் என்றார் சிவா. முட்டாள் மாதிரி பேசாதீங்க. எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? அதையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக இங்கே காத்திட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா சமூக சேவை செஞ்சிட்டு இருக்கீங்க. உங்க ஆர்டரே வேண்டாம். இரத்து பண்ணிக்குவோம். நான் கிளம்பறேன் என்று தொலைபேசியைத் துண்டித்தார் மாணிக்கம். மருத்துவமனையில் செய்ய வேண்டியவற்றை முடித்ததும் வீட்டுக்குச் சென்றார் சிவா. வேலை ஓடவில்லை. அடிபட்ட சிறுவரின் நிலைமை எப்படி இருக்கோ என்று நினைத்தவர் திரும்பவும் மருத்துவமனைக்குப் போனார். அங்கு மாணிக்கம் நின்றார். அங்கிருந்த பணியாளர் மாணிக்கத்திடம் சிவாவைக் காட்டி, “சார். காலைல உங்க மகனை இங்கே கொண்டு வந்து சேர்த்தது இவருதான் சார்” என்றார். மாணிக்கம் கண்கள் கலங்கியபடி சிவாவின் கையைப் பிடித்தார். “ரொம்ப நன்றி சிவா. நீங்க காப்பாத்துனது என் பையனைத்தான். நான் அப்படி பேசியது தவறுதான். என்னை மன்னிச்சுக்கங்க. இந்தாங்க ஐம்பதாயிரம் ரூபாய். வச்சுக்கங்க. இந்தப் பணம் வேலைக்கு முன்பணம் இல்லை. என் பையனைக் காப்பாத்தினதுக்கு என்றார். மன்னிக்கணும். நான் மனிதாபிமான அடிப்படையில்தான் இந்த உதவியைச் செய்தேன். பணத்தை எதிர்பார்த்து அல்ல என்றார் சிவா. அப்படின்னா வேலைக்கு முன்பணமா வச்சுக்கங்க என்றார் மாணிக்கம். இல்லே ஐயா. உங்க மகன்னு தெரிஞ்சதால நீங்க இப்படி பேசுறீங்க. வேறு ஆளா இருந்திருந்தா எனக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்க மாட்டீங்க. என் நியாயத்தையும் காது கொடுத்து கேட்டிருக்க மாட்டீங்க. ஆனால் நான் உங்க மகனை யார்னே தெரியாமத்தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் மனித உயிரைவிட பணம் முக்கியமல்ல. இப்ப நீங்க கொடுக்கற இந்த வேலையே உங்க பையனைக் காப்பாற்றியதால்தானே தவிர, என் மனிதாபிமானத்துக்காக அல்ல. அதனால இந்த வேலையை நான் செய்யறதா இல்லை. என்னால உங்க அரை மணி நேரத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாதுதான். ஆனால் உங்க அரை மணி நேரம் எந்த உயிரையும் திரும்பக்கொண்டு வந்திடாது என்று சொல்லிவிட்டு திருப்தியுடன் நடந்தார் சிவா.

அன்பு நேயர்களே, மனிதம் இன்னும் நம் மத்தியில் மடிந்து போகவில்லை ஆயினும், மனிதம் நிறைந்த மனங்கள் இன்றைய உலகுக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகின்றன. மியான்மாரிலிருந்து வெளியேறும் Rohingya இன மக்கள் பற்றி இந்நாள்களில் நாம் கேள்விப்படும் தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. ஆயிரக்கணக்கான பங்களாதேஷ் மக்களும், ரோஹிங்க்யா அகதிகளும் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் வங்காள விரிகுடா கடல் பகுதியில், ஆள்கடத்தும் இடைத் தரகர்களால் பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கப்பல்களில் பயணம் செய்து, தப்பி வந்தவர்களிடம் நேரடியாகப் பேசிய ஊடகங்கள் பல திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டுள்ளன. ரோஹிங்க்யா இளைஞர் ஒருவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

கால்நடைகளை ஏற்றிச்செல்லும் மியான்மார் படகில் ஏறி வெளிநாட்டில் அடைக்கலம் கேட்கச் சென்றேன். கடலில் 9 நாட்கள் இருந்த பிறகு தாய்லாந்து கடற்கரைக்கு அருகில் மிகப் பெரிய சரக்குக் கப்பலில் ஏற்றப்பட்டோம். அப்படகில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அதில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள். அதில் 14 நாட்கள் இருந்தோம். நாங்கள் அந்தக் கப்பலில் ஏற்றப்பட்ட உடனேயே ஆட்களைக் கடத்தும் 3 பேர், கையில், கைபேசியுடன் அந்தக் கப்பலில் ஏறினார்கள். யாருக்கெல்லாம் உறவினர்களின் தொலைபேசி எண்கள் தெரியும் என்று கேட்டார்கள். ஒவ்வொருவராக அழைத்து, உறவினரிடம் பேசி ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று சொல்லச் சொன்னார்கள். அப்படிப் பேசிக்கொண்டிருந்தபோதே அடித்து அலற வைத்தார்கள். யாருடைய எண்ணும் தெரியாது, நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறியவர்களைக் கடுமையாக அடித்தார்கள். கப்பல் இன்ஜினின் சங்கிலியை பிளாஸ்டிக்கால் மூடி, அதைக் கொண்டு அடித்தார்கள். அவர்கள் அடித்த பிளாஸ்டிக் தடிக்குள்ளும் இரும்பு போன்ற கனமான எதையோ மறைத்து வைத்திருந்தார்கள். ஒவ்வோர் அடியும், எலும்பு உடையும் அளவுக்கு இருந்தது. நான் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னால் இப்படி அடித்ததிலேயே 3 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்கள். ஒருவர் செத்து விழுந்தார். அவருடைய சடலத்தை உடனே கப்பலின் மேல் தளத்திலிருந்து கடலுக்குள் தூக்கி வீசிவிட்டார்கள்...

தாய்லாந்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும்,  “நான் அந்தப் படகில் பிப்ரவரி முதல் 3 மாதங்கள் தங்கியிருந்தேன். அவர்களால் அழைத்துவரப்பட்ட அகதிகளைத் தினமும் அழைத்து அடிப்பார்கள். சிலரை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறைகூட அடித்திருக்கிறார்கள். அந்தப் படகில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்” என்று விவரித்துள்ளார். தாய்லாந்து, மலேசிய ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், மனித வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முற்பட்டதை அடுத்து, இந்த மக்களை எந்த நாட்டிலும் இறக்கி விடாமல் கடலிலேயே பிணையாகப் பிடித்து வைத்துள்ளனர். அகதிகளை, அவர்களுடைய உறவினர்களுக்கு கைபேசி மூலம் பேசச் செய்து அதிகத் தொகையையும் கேட்கிறார்கள். அத்துடன் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்குகிறார்கள். இடைத் தரகர்கள் கரையிலும் பல முகாம்களை அதிகாரிகளுக்குத் தெரியாமல் இரகசியமாக நடத்துகிறார்கள். அவற்றில் இறப்பவர்களைப் பெரிய குழி தோண்டிப் புதைத்து விடுகிறார்கள்.

தெற்கு தாய்லாந்திலும் மலேசியாவிலும் இப்படி அகதிகள் புதைக்கப்பட்ட இரகசியக் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மலேசியாவில் அடையாளம் தெரியாத 139 கல்லறைப் பகுதிகளும், கடத்தப்பட்ட அகதிகளுக்கான 28 வதை முகாம்களும் கடந்த வாரத்தில் கண்டறியப்பட்டன. மலேசியாவின் அண்டை நாடான தாய்லாந்தில், பல்வேறு அகதி வதைமுகாம்களும், புதைகுழிகளும் இந்த மாதத் தொடக்கத்தில் கண்டறியப்பட்டன. மியான்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து, மலேசியாவில் புகலிடம் தேடி வந்த அகதிகளின் உடல்கள் அந்தக் கல்லறைகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மாரில், சிறுபான்மை ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நாட்டில் நடைபெற்ற மதக் கலவரங்களில் நூற்றுக்கணக்கான ரோஹிங்க்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதனால், மியான்மாரிலிருந்து தப்பி, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தஞ்சமடையும் நோக்கில் ஏராளமான ரோஹிங்க்யா முஸ்லிம்கள் கடல் வழியாக வருகின்றனர்.

அவர்களைத் தவிர, பொருளாதாரத்தில் பின்தங்கிய பங்களாதேஷ் நாட்டிலிருந்தும், பிழைப்பு தேடி பலர் அந்த நாடுகளுக்கு கடல் வழிப் பயணம் மேற்கொள்கின்றனர். குடிபெயரும் மக்கள் பற்றிய செய்திகள் இப்படி முடிவில்லாமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க, “கம்போடியாவுக்கு வரவேற்பு, புலம்பெயரும் மக்களிடம் ஆஸ்திரேலியா சொல்லாத உண்மைகள்” என்ற தலைப்பில் கடந்த வாரத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சக் கோரும் நோக்கில் சட்டவிரோதமாக படகுகள் மூலம் வருபவர்களைத் தடுக்கும் முயற்சிகளைக் கடுமையாக்கி வருவதாக தெரிவிக்கும் ஆஸ்திரேலிய அரசு, அவர்களை முதலில் நவ்ரூ தீவில் தங்க வைக்கிறது. நவ்ரூவிலுள்ள சிலரை அவர்கள் விரும்பினால் கம்போடியாவில் குடியேற வைக்கும் நோக்கத்தில் ஆஸ்திரேலிய அரசு, கம்போடிய அரசுடன் ஒப்பந்தம் ஒன்றையும் செய்துள்ளது. இந்த அகதிகளுக்கான மீள்குடியேற்றச் செலவுகளுடன் ஆஸ்திரேலிய நாட்டுப் பண மதிப்பில் 4 கோடி டாலர்களையும் வரும் நான்கு ஆண்டுகளுக்குள் இந்நாட்டிற்கு வழங்குவதாக ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. அதேநேரம், ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் வறிய மக்களுக்கு கம்போடியா பற்றிய பொய்யான தகவலும் சொல்லப்படுகின்றது. எவ்வாறெனில், கம்போடியாவில் வேலைவாய்ப்புகளும், மருத்துவ வசதிகளும் அதிகம். வன்முறைக் குற்றங்களே கிடையாது, வெறி நாய்கள் இல்லை... இப்படி குடிபெயரும் மக்களுக்குச் சொல்லப்பட்டு அவர்கள் கம்போடியாவில் குடியேற பரிந்துரைக்கப்படுகின்றனர். இதே நம்பிக்கையில் 2 ஈரானிய ஆண்களும், ஒரு பெண்ணும், ஒரு ரோங்கிக்யா ஆணும் கம்போடியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், கம்போடியாவில் பொதுவாக, மருத்துவ மற்றும் நலவாழ்வு வசதிகள் குறைவு. தலைநகர் Phnom Penhக்கு வெளியே மருத்துவ வசதிகள் கிடையாது. மருத்துவமனைகளிலும், மருத்துவர்களிடமும் முதலில் பணம் செலுத்திய பின்னர்தான் சிகிச்சை பெற முடியும். நாட்டில் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். சிலநேரங்களில் மக்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான கிராமப்புறப் பெண்கள் துணித் தொழிற்சாலைகளில் நீண்ட நேரம் வேலை செய்கின்றனர். இப்பெண்கள் வாரத்திற்கு ஏறக்குறைய ஐம்பது டாலரை ஊதியமாகப் பெறுகின்றனர். நாட்டின் 70 விழுக்காட்டினர் விவசாயிகள். ஒரு தாய் 3 வாரங்களாக கடும் காய்ச்சலாக இருந்த தனது 8 மாதக் குழந்தைக்குச் சிகிச்சை பெறுவதற்கு இரண்டு மணி நேரம் பேருந்தில் பயணம் செய்தார் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

உலகிலுள்ள மிக வறிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில், ஏறக்குறைய 20 ஆண்டுகள் கடுமையான போர் நடைபெற்றது. இதனால் அந்நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், சமூகம், அரசியல் என அனைத்தும் மிகவும் சிதைவடைந்துள்ளன. கம்போடியாவின் ஒரு கோடியே 50 இலட்சம் மக்களுள் ஏறக்குறைய 18 விழுக்காட்டினர் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருவாயில் வாழ்கின்றனர். ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்று சொல்லி, இதற்கு கடுமையான எதிர்ப்பும் எழுந்துள்ளது. தனது குடிமக்களுக்கே கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்கக் கஷ்டப்படும் கம்போடியா அரசு, அகதிகளாக ஏற்பவர்களின் நலன்களை எப்படி கவனிக்க முடியும் என, ஆஸ்திரேலிய மனித உரிமை ஆர்வலர் Iyan Rindas அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.(புகலிடம்  கோருபவர்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் அமைப்பின் Refugee Action Collective பேச்சாளர் Rindas)

அன்பர்களே, சாலையோர மின்கம்பத்தில் விழுந்து இறந்துபோன ஒரு காகத்திற்காக பல நூறு காகங்கள் அந்த இடத்தில் ஒன்றாய்க் கூடி, யார் விரட்டியும் பறக்காமல் ஓயாமல் ஒப்பாரி வைப்பதைப் பார்க்கிறோம். இப்படி நாம் மனிதாபிமானத்தை பல்வேறு வழிகளில் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்று அதிகம் தேவை, மனிதம் இதயம் கொண்ட மனிதர்கள். ஜூன் முதல் நாளில் புத்தகப் பைகளுடன் ஆனந்தமாகப் புதிய வகுப்பில் அமர்ந்திருக்கும் நம் வருங்காலத் தலைமுறைகள் மனிதத்தைப் போற்றட்டும், மனிதாபிமானத்தில் வளரட்டும். மனிதம் நிறைந்த தலைமுறைகள் எழும்பட்டும்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.