2015-06-01 16:08:00

நம் கடவுள், தனக்குள் தானே புதைந்திருக்கும் கடவுள் அல்ல


ஜூன்,01,2015 தனக்குள் தானே நித்தியத்திற்கும் புதைந்திருக்கும் கடவுள் நம் கடவுள் அல்ல, மாறாக, தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூவரின் உறவில் வெளிப்படுபவர் நம் கடவுள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மே 31, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட மூவொரு இறைவன் பெருவிழாவையொட்டி பாரிஸ் மாநகரில் உள்ள நோத்ரு தாம் (Notre Dame) பேராலயத்தில் திருப்பலியாற்றிய கீழை வழிபாட்டுமுறை திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள் தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டுள்ள பரிசு என்றும், இந்தப் பரிசின் முழு மதிப்பும் மற்றவரோடு நாம் கொள்ளும் உறவில் வெளிப்படுகிறது என்பதை, உறவின் இலக்கணமாகத் திகழும் மூவொரு இறைவன் திருவிழா நமக்கு நினைவுபடுத்துகிறது என்றும் கர்தினால் சாந்த்ரி அவர்கள் எடுத்துரைத்தார்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் வாழும் வறியோரின் கல்வி, நலவாழ்வு ஆகிய பணிகளுக்கு கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக நிதி உதவியும், பிற உதவிகளும் செய்துவரும் Oeuvre d'Orient என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் ஆண்டுவிழாவையொட்டி கர்தினால் சாந்த்ரி அவர்கள் நிறைவேற்றிய இத்திருப்பலியில், இவ்வமைப்பினர் ஆற்றிவரும் அரியப் பணிகளை பாராட்டினார்.

1856ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பிறரன்பு அமைப்பின் 159வது ஆண்டு நிறைவையொட்டி நிகழ்ந்த இத்திருப்பலியில், பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் André Vingt-Trois அவர்களும் கலந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.