2015-06-01 15:45:00

திருத்தந்தை:மண்ணகப் பயணத்தின் இறுதி முடிவு,இறைவனில் கலப்பதே


ஜூன்,01,2015 இறைவனோடும், ஒருவர் ஒருவரோடும் நாம் கொள்ளும் உறவை, மூவொரு இறைவன் என்ற முன் உதாரணத்தைக் கொண்டு மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மே 31, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட மூவொரு இறைவன் திருவிழாவை மையப்படுத்தி, நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, நமது மண்ணகப் பயணத்தின் இறுதி முடிவு, மூவொரு இறைவனில் இரண்டறக் கலப்பதே என்று எடுத்துரைத்தார்.

புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மூவேளை செப உரையில், நாம் ஒவ்வொருவரும் தனித்திருக்கவோ, ஒருவருக்கொருவர் எதிராளியாக இருக்கவோ அழைக்கப்படவில்லை, மாறாக, ஒருவர் ஒருவருக்காக வாழவே அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

மரியன்னைக்கென அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தின் இறுதி நாளன்று, மூவொரு இறைவன் என்ற பேருண்மையை ஆழமாகப் புரிந்து, அதை வாழ்வாக்கிய மரியன்னை நமக்கு உதவி புரியட்டும் என்று கூறி,  'தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே' என்ற செபத்துடன், கூடியிருந்த அனைவரையும், சிலுவை அடையாளம் வரையும்படி திருத்தந்தை தூண்டினார்.

மூவேளை செப உரையின் இறுதியில், இவ்வாரம் வியாழனன்று கொண்டாடப்படும் இயேசுவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழா குறித்து மக்களிடம் கூறியத் திருத்தந்தை, இவ்விழாவில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.