2015-06-01 15:49:00

திருத்தந்தை நடத்தும் திரு நற்கருணை பவனி


ஜூன்,01,2015 ஜூன் 4, வருகிற வியாழனன்று கொண்டாடப்படும் கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலய வளாகத்தில் மாலை 7 மணிக்கு திருப்பலியாற்றுவார் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

இத்திருப்பலியைத் தொடர்ந்து, புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவிலிருந்து புறப்படும் திரு நற்கருணை பவனி, புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராயலத்தை அடையும் என்றும், இப்பவனியை முன்னின்று நடத்தும் திருத்தந்தை, பவனியின் இறுதியில் திரு நற்கருணை ஆசீர் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முதன்முறையாக திரு நற்கருணையை பெற்ற சிறுவர், சிறுமியர், திருத்தந்தை நிகழ்த்தும் விழாத் திருப்பலியில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக, அவர்களுக்குச் சிறப்பான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதேபோல், நோயுற்றவர்களுக்கென தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், உரோம் மறைமாவட்டம், இத்திங்களன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.

மேலும், குடிபெயர்ந்தோரும், அகதிகளும் தாங்கள் சென்றடையும் நாடுகளில் வரவேற்பையும், மதிப்பையும் பெறுவதற்கு செபிப்போம் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் மாதத்தின் பொது செபக் கருத்தாக வெளியிட்டுள்ளார்.

மேலும், இளையோர் இயேசுவுடன் மேற்கொள்ளும் தனிப்பட்டச் சந்திப்பின் விளைவாக, அவர்கள் அருள்பணியாளர்களாகவும், அர்ப்பணிக்கப்பட்டோராகவும் வாழ்வதற்கு முன்வர செபிப்போம் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி அறிவிப்புப் பணியின் செபக் கருத்தாக வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.