2015-06-01 15:24:00

கடுகு சிறுத்தாலும் – பணமா, மனித உயிரா, எது முக்கியம்?


சிவாவுக்குப் பண நெருக்கடி. அன்று தொழிலதிபர் மாணிக்கம், சிவாவைத்  தொலைபேசியில் அழைத்து, ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும், உடனே புறப்பட்டு வாங்க என்று சொன்னார். உடனே புறப்பட்ட சிவா, வழியில் பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவர் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்தார். அங்கே நின்ற கூட்டம், எதுவும் செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் சிவா, அவ்வழியே சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி, யார் உதவிக்கும் காத்திராமல் அந்தச் சிறுவரைத் தூக்கி ஆட்டோவில் கிடத்தி மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்தார் சிவா. அப்போது மாணிக்கம், சிவாவை தொலைபேசியில் மீண்டும் அழைத்தார். மன்னிக்கனும் ஐயா. வரும் வழியில் ஒரு விபத்து,  ஒரு சிறுவர் அடிபட்டு கிடந்தார். அவரை அப்படியே போட்டுட்டு வர மனசு வரல. அதான் மருத்துவமனைக்கு கொண்டுவந்தேன் என்றார் சிவா. முட்டாள் மாதிரி பேசாதீங்க. எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? அதையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக இங்கே காத்திட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா சமூக சேவை செஞ்சிட்டு இருக்கீங்க. உங்க ஆர்டரே வேண்டாம். நான் கிளம்பறேன் என்று தொலைபேசியைத் துண்டித்தார் மாணிக்கம். மருத்துவமனையில் செய்ய வேண்டியவற்றை முடித்து திரும்பவும் அச்சிறுவரிடம் போனார். அங்கு மாணிக்கம் நின்றார். அங்கிருந்த பணியாளர் மாணிக்கத்திடம் சிவாவைக் காட்டி, “சார். காலைல உங்க மகனை இங்கே கொண்டு வந்து சேர்த்தது இவருதான் சார்” என்றார். மாணிக்கம் கண்கள் கலங்கியபடி சிவாவின் கையைப் பிடித்தார். “ரொம்ப நன்றி சிவா. நீங்க காப்பாத்துனது என் பையனைத்தான். நான் அப்படி பேசியது தவறுதான். என்னை மன்னிச்சுக்கங்க. இந்தாங்க ஐம்பதாயிரம் ரூபாய். இந்தப் பணம் வேலைக்கு முன்பணம் இல்லை. என் பையனைக் காப்பாத்தினதுக்கு என்றார். மன்னிக்கணும். நான் மனிதாபிமான அடிப்படையில்தான் இந்த உதவியைச் செய்தேன் என்றார் சிவா. அப்படின்னா வேலைக்கு முன்பணமா வச்சுக்கங்க என்றார் மாணிக்கம். இல்லே ஐயா. உங்க மகன்னு தெரிஞ்சதால நீங்க இப்படி பேசுறீங்க. வேறு ஆளா இருந்திருந்தா எனக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்க மாட்டீங்க. என் நியாயத்தையும் காது கொடுத்து கேட்டிருக்க மாட்டீங்க. ஆனால் நான் உங்க மகனை யார்னே தெரியாமத்தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். என்னால உங்க அரை மணி நேரத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாதுதான். ஆனால் உங்க அரை மணி நேரம் எந்த உயிரையும் திரும்பக்கொண்டு வந்திடாது என்று சொல்லிவிட்டு திருப்தியுடன் நடந்தார் சிவா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.