2015-06-01 16:17:00

அமெரிக்க ஐக்கிய நாட்டில் சுதந்திரத்தின் இருவாரக் கொண்டாட்டம்


ஜூன்,01,2015 ஜூன் 21, ஞாயிறு முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் சுதந்திரத்தின் இருவாரங்கள் கொண்டாடப்படும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

நான்காவது ஆண்டாக நடைபெறவிருக்கும் இந்த இருவாரக் கொண்டாட்டங்கள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பால்டிமோர் பேராயர் வில்லியம் லோரி அவர்கள், மதச் சுதந்திரம், ஒவ்வோர் ஆண்டும் பாதிக்கப்பட்டு வருவதை மக்கள் புரிந்துகொள்ள இது நல்லதொரு வாய்ப்பு என்று கூறினார்.

மதச் சுதந்திரம் என்பது சட்ட வழிமுறையில் எழும் விவாதம் அல்ல, மாறாக, புதியவழி நற்செய்தியை அறிவிக்கும் பணியின் ஒரு முக்கியக் கூறு என்று பேராயர் லோரி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

அடிப்படைவாதக் குழுக்களாலும், அரசுகளின் அடக்குமுறைகளாலும் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்கள், சுதந்திரத்தை இழந்து, பெருமளவு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்று பேராயர் லோரி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பால்டிமோரில் அமைந்துள்ள, விண்ணேற்பு மரியா பசிலிக்காவில், ஜூன் 21, ஞாயிறன்று காலை திருப்பலியுடன் துவங்கும் சுதந்திரத்தின் இருவாரக் கொண்டாட்டங்கள், ஜூலை 4, அமெரிக்கச் சுதந்திர நாளன்று, வாஷிங்க்டனில் அமைந்துள்ள அமல அன்னை பசிலிக்காவில் நடைபெறும் திருப்பலியோடு நிறைவடையும் என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.