2015-05-30 15:52:00

வயதானவர், குடும்பம் மற்றும் சமூகத்தின் மதிப்புமிக்க அங்கம்


மே,30,2015. கத்தோலிக்கத் திருஅவை தனது மறைப்பணிகளில் எல்லா இடங்களிலும், எல்லா மக்களின் உளவியல் மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளது என்று திருப்பீட நலவாழ்வு அவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இத்தாலியின் மிலானில் நடைபெற்றுவரும் எக்ஸ்போ அனைத்துலக கண்காட்சியில், “முதுமையடைதல்” குறித்து இடம்பெற்ற கருத்தரங்கில் இச்சனிக்கிழமையன்று உரையாற்றிய, திருப்பீட நலவாழ்வு அவைச் செயலர் பேரருள்திரு Jean-Marie Mate Musivi Mupendawatu அவர்கள், மக்களுக்குச் சேவையாற்றுவதில் திருஅவை எப்போதும் முன்னிலை வகிக்கின்றது என்று கூறினார்.

நலவாழ்வு உதவி அமைப்புகளில் வயதானவர்கள் பாதிக்கப்படுவது குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட பேரருள்திரு Mupendawatu அவர்கள், ஒருவர், வயதான காலத்திலும், குடும்பம் மற்றும் சமுதாயத்தில் மதிப்புமிக்க அங்கமாக இருக்கிறார்  என்று கூறினார்.

இரண்டாயிரமாம் ஆண்டில் உலகில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் ஏறக்குறைய 60 கோடியாக இருந்தனர், இவ்வெண்ணிக்கை 2025ம் ஆண்டில் 120 கோடியாகவும், 2050ம் ஆண்டில் 200 கோடியாகவும் உயரும் என்று WHO நிறுவனத்தின் கணிப்பையும் சுட்டிக்காட்டினார் பேரருள்திரு Mupendawatu.

இத்தாலிய மருத்துவ கழகம்(SIMF) இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.