2015-05-30 15:58:00

போர்களால் இறந்தவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் 60% அதிகரிப்பு


மே,30,2015. உலகில் இடம்பெறும் போர்களால் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அறுபது விழுக்காடு அதிகரித்துள்ளது என்று IISS என்ற போர்கள் குறித்து ஆய்வு நடத்தும் அனைத்துலக நிறுவனம் அறிவித்துள்ளது.

2012ம் ஆண்டில் 11 இலட்சமாக இருந்த இவ்வெண்ணிக்கை, 2014ம் ஆண்டில் 18 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும், போர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், போர்கள் மிகவும் வன்முறையுடன் நடக்கின்றன என்றும், போர்கள் அடிக்கடி நகர்ப் பகுதிகளில் இடம்பெறுகின்றன என்றும் IISS நிறுவனம் கூறியுள்ளது.

சிரியாவில் மட்டும் கடந்த ஆண்டில் எழுபதாயிரம் பேரும், இந்நாட்டில்  2011ல் சண்டை தொடங்கியதிலிருந்து இருபது இலட்சம் பேரும் இறந்துள்ளனர் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2008ம் ஆண்டில் உலகில் 63 இடங்களில் சண்டைகள் நடந்தன, அவை கடந்த ஆண்டில் 48 ஆகக் குறைந்துள்ளன என்றும், உள்நாட்டுச் சண்டையின் ஆபத்தை எதிர்கொள்ளும் கொலம்பியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அமைதிக்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதே இக்குறைவுக்குக் காரணம் என்றும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.