2015-05-30 15:56:00

நைஜீரிய அரசுத்தலைவர் வன்முறைக்கு எதிராகச் செயல்படுவார்


மே,30,2015. நைஜீரியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுத்தலைவர் Muhammadu Buhari அவர்கள், போக்கோ ஹாரம் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

நைஜீரியாவில் போக்கோ ஹாரம் அமைப்பின் தாக்குதல்களால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மாய்துகுரி மறைமாவட்ட ஆயர் Oliver Doehme அவர்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோது இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.

அரசுத்தலைவர் தேர்தல், எதிர்பாராத விதத்தில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்றும், வாக்காளர்கள் பெருமளவில் ஓட்டளித்தது, நாட்டில் மாற்றம் விரும்பப்படுகின்றது என்பதைக் காட்டியது என்றும் கூறினார் ஆயர் Doehme.

போக்கோ ஹாரம் அமைப்பின் தாக்குதல்களால், 20 பள்ளிகள் உட்பட, 250க்கும் அதிகமான திருஅவை கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, திருஅவை உதவும் மக்களில் அதிகமானோர் முஸ்லிம்கள் என்று மேலும் கூறினார் ஆயர் Doehme.

Aid to the Church in Need என்ற பன்னாட்டு கத்தோலிக்க பிறரன்பு நிறுவனத்தின் முயற்சியால் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார் நைஜீரிய ஆயர் Doehme. இப்பிறரன்பு நிறுவனம், 140க்கும் மேற்பட்ட நாடுகளில் துன்புறும் திருஅவைகளுக்கு உதவி செய்து வருகின்றது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.