2015-05-30 16:07:00

உலகெங்கும் இருபது கோடிப் பெண்கள் புகைப்பிடிக்கின்றனர்


மே,30,2015. இன்று உலகில் பத்துப் பெண்களுக்கு ஒருவருக்குக் குறைவாகவே புகைப்பிடித்தாலும், உலகெங்கும் ஏறக்குறைய இருபது கோடிப் பெண்கள் புகைப்பிடிக்கின்றனர் என்று ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மே,31, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் உலக புகையிலை ஒழிப்பு தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், சில நாடுகளில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, கிடைத்துள்ள ஆதாரங்களின்படி தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

புகையிலையைப் பயன்படுத்துவதை, அழகு மற்றும் சுதந்திரத்தோடு தொடர்புபடுத்தி, பெண்களை இலக்கு வைத்து, புகையிலை நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு அதிகமாகச் செலவு செய்வதைப் பார்க்கும்போது, புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தையும் தெரிவித்துள்ளார் பான் கி மூன்.  

உலக நலவாழ்வு நிறுவனம் 151 நாடுகளில் எடுத்த கணக்கெடுப்பில், இதில் பாதி நாடுகளில் புகைப்பிடிப்பவரில் சிறுவரும் சிறுமியரும் சம அளவில் உள்ளது  தெரியவந்துள்ளது.

புகையிலையைப் பயன்படுத்துவதால் உலகில் ஒவ்வோர் ஆண்டும் 15 இலட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் இறக்கின்றனர். இந்நிலை நீடித்தால் இவ்வெண்ணிக்கை 2030ம் ஆண்டுக்குள் 25 இலட்சமாக உயரக்கூடும் என்று WHO நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.