2015-05-28 16:11:00

மனிதவள மேம்பாட்டுக்குச் சிறந்த ஊடகங்கள் அவசியம்


மே,28,2015. மனித மாண்பை ஊக்குவிக்கவும், சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும், மக்கள் மத்தியில் புரிந்துகொள்தலையும் ஒருவரையொருவர் மதித்தலையும் பேணி வளர்க்கவும் புதிய மற்றும் தற்போதைய ஊடகத் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெற்ற, தகவல் தொழில்நுட்ப சமுதாயம் குறித்த உலக உச்சி மாநாட்டில் இப்புதனன்று உரையாற்றிய திருப்பீட சமூகத் தொடர்பு அவைச் செயலர் பேரருள்திரு Paul Tighe அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஒரு நல்ல தகவல் தொடர்பு, தொழில்நுட்ப சாதனையாக இல்லாமல் மனிதம் நிறைந்ததாய் எப்போதும் இருக்கும் என்றுரைத்த பேரருள்திரு Tighe அவர்கள், ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும், ஒருவர் ஒருவருடன் உரையாடல் நடத்துவதற்கும் நம்மை அர்ப்பணிப்பதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களின் சக்தியை நன்றாக உணர முடியும் என்று கூறினார்.

ஊடகத் துறையில் இத்தகைய இலக்குகளை எட்டுவதற்கு மனிதரின் மாண்பை ஊக்குவிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாக எட்டப்படும் ஒருமைப்பாட்டுணர்வை வளர்ப்பதில் நாம் எவ்வளவு வளர்கின்றோமோ அவ்வளவுக்கு நம் உரையாடல்கள் பலன் தருபவைகளாக அமையும்   என்றும் கூறினார் பேரருள்திரு Tighe.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.