2015-05-27 15:42:00

மொசாம்பிக் நாட்டு யானைகள் பாதிக்குப் பாதி அழிவு – WCS


மே,27,2015 கடந்த ஐந்து ஆண்டுகளில் மொசாம்பிக் நாட்டு யானைகளில் சரிபாதியானவற்றை வேட்டைக்காரர்கள் கொன்றிருப்பதாக, அமெரிக்காவிலிருந்து இயங்கும் வன உயிர் பாதுகாப்பு அமைப்பு (Wildlife Conservation Society – WCS) தெரிவித்திருக்கிறது.

வானில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பின்படி, மொசாம்பிக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 20,000 யானைகளாக இருந்த எண்ணிக்கை, தற்போது பத்தாயிரம் என்ற அளவுக்குச் சரிந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

மொசாம்பிக்கின் வடபகுதியில் இந்த பாதிப்பு கூடுதலாக இருப்பதாக கூறும் WCS அமைப்பு, அங்கிருந்த யானைகளில் 95 விழுக்காடு கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறது.

அண்டைநாடான தான்சானியாவில் இருந்த யானைகளை பெருமளவு வேட்டையாடி அழித்துவிட்டு அங்கிருந்து மொசாம்பிக் நாட்டுக்கு வந்திருக்கும் வேட்டைக்காரர்கள் தான் இந்த யானைகளின் கொலைகளுக்குக் காரணம் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யானைகளின் தந்தங்கள் ஆசியநாடுகளில் விலை மதிப்புமிக்க தந்தச் சிலைகளாகவும், நகைகளாகவும் உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அந்த தந்த வர்த்தகமே யானைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆப்ரிக்கா முழுமையிலும் ஆண்டுக்கு 30,000 யானைகள் கொல்லப்படுவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

ஆதாரம் : WCS.org / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.