2015-05-27 15:32:00

பூமியின் நலனுக்குச் சவாலாக அமையும் பொருளாதார அமைப்பு


மே,27,2015 பூமிக் கோளத்தின் நலனுக்கு, பெரும் சவாலாக அமையும் வண்ணம், நமது பொருளாதார அமைப்புக்கள் பாதகமான வழிகளில் செயல்பட்டு வருகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மே 25, இத்திங்கள் முதல், 27 இப்புதன் முடிய வத்திக்கானில் நடைபெற்ற Centesimus Annus எனப்படும் பாப்பிறை அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல், திருத்தந்தை 16ம் பெனெடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோர், சமுதாய அக்கறையுடன் வெளியிட்டுள்ள பல முக்கிய கருத்துக்களை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் பகிர்ந்துகொண்டார்.

இன்றைய உலகின் பொருளாதார அமைப்புக்கள் மனித சமுதாயத்தின் நலனைக் குலைக்கும்வண்ணம் வெளியிட்டுவரும் கருத்துக்களுக்கு மாற்றாக, உண்மையான நன்னெறி விழுமியங்களை வெளியிடும் கடமை திருஅவைக்கு உள்ளது என்று கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்தினார்.

1891ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையின் சமுதாயப் படிப்பினைகளை உள்ளடக்கி, திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் வெளியிடப்பட்ட Rerum novarum எனப்படும் புகழ்பெற்ற சுற்றுமடலின் முதல் நூற்றாண்டையொட்டி, 1991ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 'நூறாவது ஆண்டு' என்ற பொருள்படும் Centesimus Annus என்ற தலைப்பில் சுற்றுமடலை வெளியிட்டதைத் தொடர்ந்து, Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளை 1993ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இவ்வறக்கட்டளை இவ்வாண்டு ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டுக் கருத்தரங்கு, "பொருளாதார, சமுதாய வாழ்வின் அடிப்படை கூறுகளை மறுபடியும் சிந்திப்பது" என்ற தலைப்பில் நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.