2015-05-27 14:39:00

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – திருமணத் தயாரிப்பு


மே,27,2015. இப்புதன் அதிகாலை உரோம் நகரில் மேகமூட்டம் காணப்பட்டதால், மழை தூறலாம் என்ற சந்தேகம் இருந்தது. இத்தாலியின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் இந்த சந்தேகம் மேலும் வலுத்தது. ஆனால், காலை எட்டு மணியளவிலேயே வானம் தெளிவாகி, கோடைகாலத்துக்குரிய வெப்பமும் பரவத் துவங்கியது. வழக்கம்போல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வி உரையும் தூய பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்றது. தமிழகத்திலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் தூய பேதுரு வளாகம் நிரம்பி வழிய, குடும்பம் குறித்த தன் மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக இப்புதனன்று, திருமண நிச்சயதார்த்தம் குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை.

குடும்பம் மற்றும் திருமணம் குறித்த நம் மறைக்கல்வி உரையில் இன்று, திருமணத்திற்கு ஒரு தயாரிப்பாக இருக்கும் நிச்சயதார்த்தத்தின் முக்கியத்துவம் குறித்து நோக்குவோம், என தன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். நிச்சயதார்த்தம் எனும் இந்த ஒப்பந்த உடன்படிக்கையானது, நம்பிக்கையுடன் ஒப்படைப்பதையும், அர்ப்பணத்தையும் குறிக்கிறது. அழகு நிரம்பியதும், அதேவேளை அர்ப்பணத்துடன்கூடியதுமான திருமண ஒப்பந்தத்தை நோக்கி திட்டமிடுவதற்கும், தம்பதியர் ஒருவர் ஒருவரைக் குறித்து மேலும் தெரிந்துகொள்வதற்கும் உதவும் காலமே இந்த நிச்சயதார்த்த காலம். வாழ்வு முழுவதும் தொடரும் அன்பின் உடன்படிக்கையில் நுழைவதற்கு, தாராள மனதுடன்கூடிய, சுதந்திரமான, அதேவேளை, நிதானமான முடிவை எடுப்பதற்கு தேவையுள்ளது. அதற்கு, அன்பு நமக்கு அழைப்பு விடுக்கிறது.  திருஅவையும் இந்த நிச்சயதார்த்த காலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்விதமாக, இக்காலத்தில், திருமணத் தயாரிப்புகளுக்கான வகுப்புகளை நடத்துகிறது. திருமணத்திற்குத் தயாரித்துவருவோர், தாங்கள் பகிரவிருக்கும் வாழ்வில், செபம் மற்றும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தையும், வருங்காலத்தையும், ஒருவர் மற்றவர்மீது கொண்டிருக்கும் அன்பையும் குறித்து ஆழ்ந்து சிந்திக்க உதவும்நோக்கில், ஏற்கனவே திருமணமான தம்பதியரின் உதவியை நாடவேண்டும் என அழைப்புப் பெறுகிறார்கள். திருமணத்திற்காகத் தங்களைத் தயாரித்துவரும் இளையோருக்காக நாம் செபிப்போம். அவர்கள், தங்கள் திருமணத்திற்காக உலகப்போக்குகளின்படியும், அற்பமான முறையிலும் தயாரிக்காமல், கிறிஸ்துவிலான விசுவாசத்திலிருந்து பிறப்பெடுக்கும் ஞானம், நம்பிக்கை மற்றும் மகிழ்வின் உதவியுடன் தயாரிக்கட்டும்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.