2015-05-27 15:59:00

தாய்மையின் பெருமைக்கு சாட்சிகளாக இருப்போம்-பிரான்ஸ் ஆயர்கள்


மே,27,2015 மனித உயிரைக் கருவில் தாங்குவது முதல், உயிரைப் பேணும் பண்பை உலகிற்கு வெளிப்படுத்தும் தாய்மையின் பெருமைக்கு சாட்சிகளாக இருப்போம் என்று பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவை அழைப்பு  விடுத்துள்ளது.

மே மாதத்தின் இறுதி ஞாயிறு, பிரான்ஸ் நாட்டில் அன்னை தினமாகக் கொண்டாடப்படுவதையொட்டி, மே 31, வருகிற ஞாயிறை, உயிரைப் போற்றும் தேசிய நாளாகக் கொண்டாட, பிரான்ஸ் ஆயர்கள் முடிவெடுத்துள்ளனர்.

"அன்னையரைக் கொண்டாடுதல், உயிரை வரவேற்பது" என்ற தலைப்பில் இவ்வாண்டு கொண்டாடப்படும் உயிரைப் போற்றும் தேசிய நாளையொட்டி, திருவிழிப்பு வழிபாடுகள், கருத்தரங்குகள் ஆகியவை இடம்பெறும் என்றும், இந்நாளையொட்டி திரட்டப்படும் நிதி, மகப்பேறு காலத்தில், பிரச்சனைகளைச் சந்திக்கும் அன்னையருக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

1995ம் ஆண்டு திருத்தந்தை புனித யோவான் பவுல் அவர்கள் வெளியிட்ட Evangelium Vitae, அதாவது, 'வாழ்வின் நற்செய்தி' என்ற சுற்றுமடலில், உயிரைப் போற்றும் தேசிய நாள், ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வோரு நாட்டில் கொண்டாடப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.