2015-05-26 14:35:00

விவிலியத் தேடல் : மணமகளின் தோழியர் உவமை – பகுதி - 1


மே மாதம் முடியவுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை, முடிவுகளின் மாதங்கள் அல்லது, மாற்றங்களின் மாதங்கள் என்று சொல்லலாம். பள்ளி, மற்றும் கல்லூரியில் நம் இளையோர் எழுதியத் தேர்வுகளின் முடிவுகள் இம்மாதங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள், பிரமிக்க வைத்தன; சிறிது பயத்தையும் தந்தன.

தேர்வு முடிவுகள், கூடவே மாற்றங்களையும் கொணரும். மேல்படிப்பா, தொழிற்கல்வியா என்பன, பள்ளி மாணவர்கள் தேடும் மாற்றங்கள். நிறுவனங்களில் சேர்ந்து வேலை செய்வதா, அல்லது, சுயமாக தொழில் செய்வதா என்பன, கல்லூரி மாணவர்கள் தேடும் மாற்றங்கள். ஒரு சில குடும்பங்களில், கல்வியை முடித்தப் பெண்களுக்கு, திருமணம் செய்வது குறித்தும் தேடல்கள் துவங்கியிருக்கும்.

கடந்த சில வாரங்களாக, திருமண விருந்து உவமையில் தேடல்களை மேற்கொண்ட நாம், திருமணத்தோடு தொடர்புடைய மற்றுமோர் உவமையில் இன்று நம் தேடலை ஆரம்பிக்கிறோம். மத்தேயு நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ள 'பத்துத் தோழியர் உவமை' அல்லது, 'மணமகளின் தோழியர் உவமை'யில் நம் தேடல் பயணம் இன்று துவங்குகிறது.

நமது பயணத்தின் முதல் பகுதியாக, இவ்வுவமையை இயேசு கூறியச் சூழலைக் குறித்து நம் தேடலை மேற்கொள்வோம். மத்தேயு நற்செய்தி 22ம் பிரிவின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ள திருமண விருந்து உவமை இவ்வாறு ஆரம்பமானது:

மத்தேயு நற்செய்தி 22: 1-2

இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: 'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.

25ம் பிரிவின் துவக்கத்தில், 

மத்தேயு நற்செய்தி 25: 1-2

அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள்.

என்ற வார்த்தைகளுடன், 'மணமகளின் தோழியர் உவமை'யை இயேசு துவங்குகிறார்.

மத்தேயு நற்செய்தியில், ஒன்றன்பின் ஒன்றாக கூறப்பட்டுள்ள இவ்விரு உவமைகளும், இறையரசை ஒரு திருமண நிகழ்வோடு தொடர்புபடுத்திப் பேசுகின்றன. தன்னுடைய அதிகாரத்தைக் கேள்வி கேட்ட மதத் தலைவர்களை மனதில் வைத்து, திருமண விருந்து உவமையைக் கூறிய இயேசு, அவ்வுவமையின் இறுதியில் ஓர் எச்சரிக்கையை விடுக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என தங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் மதத் தலைவர்களும், இஸ்ரயேல் மக்களும் இறையரசு என்ற திருமண விருந்தில் பங்குபெறப் போவதில்லை என்றும், வேற்றினத்தார் விண்ணரசின் விருந்தில் பங்குபெறுவர் என்றும் இயேசு தெளிவாகக் கூறும் வகையில், இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். (மத்தேயு 22: 14) என்ற புகழ்பெற்ற வார்த்தைகளைக் கூறுகிறார்.

22ம் பிரிவில் கூறப்பட்டுள்ள திருமண விருந்து உவமை, 25ம் பிரிவில் கூறப்பட்டுள்ள மணமகளின் தோழியர் உவமை என்ற இவ்விரு உவமைகளுக்கும் இடைப்பட்ட, 23, 24 ஆகிய இரு பிரிவுகளில், இயேசுவுக்கும், மதத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற காரசாரமான வாக்குவாதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 23ம் பிரிவில், மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரை கடுமையான வார்த்தைகளால் இயேசு கண்டிக்கிறார். தன்னைச் சூழ்ந்திருந்த மக்களிடம், மதத் தலைவர்களைப் பற்றி, இப்பிரிவின் துவக்கத்தில் இயேசு கூறும் வார்த்தைகள், அன்றும் சரி, இன்றும் சரி, மதத் தலைவர்களுக்கு விழும் சக்திவாய்ந்த சாட்டையடி என்று சொல்லலாம்:

மத்தேயு நற்செய்தி 23: 1-3

பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.”

இதைத் தொடர்ந்து, இப்பிரிவின் 13ம் இறைச் சொற்றொடர் முதல், 36ம் இறைச் சொற்றொடர் முடிய, வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! என்றும், குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! என்றும், மதத் தலைவர்களை வெளிப்படையாக, நேரடியாக இயேசு கண்டிக்கிறார். இப்பகுதியில் 16 முதல் 24 முடிய உள்ள இறைச் சொற்றொடர்களில், இயேசு மதத் தலைவர்களை பார்வை இழந்தவர்கள் என்று நான்கு முறை சாடுகிறார்: குருட்டு வழிகாட்டிகளே!, குருட்டு மடையரே! குருடரே! என்று அவர்களை அழைத்து, அவர்கள் செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

பார்வை இழந்து தவிக்கும் மதத் தலைவர்களைப்பற்றி இயேசு கூறும் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் கூறப்பட்டுள்ள நிகழ்வு நமக்கு நினைவுக்கு வருகிறது. பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை அளித்ததால், மதத் தலைவர்கள், பார்வை அடைந்தவரை தொழுகைக் கூடத்திலிருந்து வெளியே தள்ளியதை அறிந்த இயேசு, தன்னால் உடலளவில் பார்வை அடைந்தவரை சந்தித்து, அவருக்கு உள்ளத்தளவிலும் பார்வைத் திறன் வழங்குகிறார். பார்வை இழந்தவர், படிப்படியாக உடலிலும், உள்ளத்திலும் பார்வை பெற்ற அதே வேளையில், மதத் தலைவர்கள், படிப்படியாக பார்வை இழந்தனர் என்பதை, நற்செய்தியாளர் யோவான், ஓர் அழகிய இறையியல் பாடமாக, 9ம் பிரிவு முழுவதும் கூறியுள்ளார். அப்பிரிவின் இறுதியில் கூறப்பட்டுள்ள வரிகள், மதத் தலைவர்கள் பார்வை இழந்து தவிப்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றன:

யோவான் 9: 39-41

அப்போது இயேசு, “தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்” என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, “நாங்களுமா பார்வையற்றோர்?” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் ‘எங்களுக்குக் கண் தெரிகிறது’ என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்” என்றார்.

பார்வை இழந்த மதத் தலைவர்கள், உண்மையான இறைவாக்கினர்களைக் கொன்றனர் என்பதை இயேசு அவர்களுக்கு நினைவுறுத்துகிறார். மறைநூல் அறிஞருக்கும், பரிசேயருக்கும் இயேசு விடுக்கும் எச்சரிக்கைகளின் சிகரமாக, 23ம் பிரிவின் இறுதியில் இயேசுவின் சொற்கள் இவ்விதம் ஒலிக்கினறன:

மத்தேயு நற்செய்தி 23: 35ஆ-36

இவ்வாறு நேர்மையாளரான ஆபேலின் இரத்தம்முதல் திருக்கோவிலுக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொன்ற பரக்கியாவின் மகன் சக்கரியாவின் இரத்தம்வரை இம்மண்ணில் சிந்தப்பட்ட நேர்மையாளர் அனைவரின் இரத்தப் பழியும் உங்கள்மேல் வந்து சேரும். இத்தலைமுறையினரே இத்தண்டனைகள் அனைத்தையும் அடைவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இயேசுவுக்கும், மதத் தலைவர்களுக்கும் இடையே நிகழ்ந்த இந்தக் காரசாரமான கருத்துப் பரிமாற்றத்திற்குப் பிறகு, எருசலேம் நகரின் மீது இயேசுவின் கவனம் திரும்புகிறது. அந்நகரம், இறைவாக்கினர்களைக் கொன்ற நகரம் என்பதால் அதுவும் அழிவைச் சந்திக்கும் என்று இயேசு கூறும் வார்த்தைகளோடு 23ம் பிரிவு முடிவடைகிறது.

24ம் பிரிவில், இயேசுவுக்கும், சீடர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த உரையாடலில், எருசலேம் கோவிலின் அழிவுபற்றியும் (மத். 24: 1-2), இறுதி காலத்தில் வரப்போகும் அழிவு, துன்பம் இவை குறித்தும் (மத். 24: 3-28) இயேசு எச்சரிக்கிறார்.

இத்துன்பங்களின் இறுதியில், மானிடமகனின் வருகை இருக்கும் (மத். 24: 29-31) என்றும், அவரது வருகை, எப்போது நிகழும் என்பது தெரியாததால், எப்போதும் விழிப்பாயிருந்து அவரது வரவை எதிர்பார்க்க வேண்டும் என்றும் இயேசு எச்சரிக்கை விடுக்கிறார்.

எதிர்பாராத, நினையாத நேரத்தில் மானிடமகனின் வருகை இருக்கும் என்பதை, சீடர்களின் உள்ளங்களில் ஆழப்பதிக்கும் வண்ணம், இயேசு, இரு உருவகங்களைப் பயன்படுத்துகிறார். முதல் உருவகத்தில், திருடர்களின் தாக்குதலிலிருந்து வீட்டைப் பாதுகாக்கும் உரிமையாளரை இயேசு  சித்திரிக்கிறார்:

மத்தேயு நற்செய்தி 24: 42-44

விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

தலைவர் ஊரில் இல்லை எனினும், அவரது நம்பிக்கைக்கு உரிய பணியாளர் எவ்விதம் நடந்துகொள்வார் என்பதை இரண்டாவது உருவகத்தில் இயேசு சித்திரிக்கிறார்:

மத்தேயு நற்செய்தி 24: 45-51 (லூக்கா நற்செய்தி 12: 41-48)

தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன் பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.

மானிடமகனின் வருகை எந்த வேளையிலும் நிகழக்கூடும் என்பதால், அவரது வருகைக்காக விழிப்புடன் காத்திருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த, இயேசு 'மணமகளின் தோழியர் உவமை'யைச் சொல்கிறார். இந்த உவமையின் நுணுக்கங்களை நம் அடுத்தவாரத் தேடலில் தொடர்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.