2015-05-26 16:08:00

மக்களோடு இருப்பது எனக்கு நன்றாக இருக்கும், திருத்தந்தை


மே,26,2015. வீதிகளில் அமைதியாக நடந்து சென்றதை தான் அதிகம் இழப்பதாகவும், தான் எப்போதும் நகரத்தின் மனிதராக இருந்ததாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“La Voz Del Pueblo” என்ற அர்ஜென்டீனா தினத்தாள் நிருபர் Juan Beretta அவர்களுக்கு தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் ஏறக்குறைய 45 நிமிடங்கள் அளித்த பேட்டியில், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தபோது இருந்த உணர்வுகள், பொது வாகனங்களில் பயணம் செய்தது, தெருக்களில் நடந்தது, பிட்சா கடையில் அமர்ந்து சாப்பிட்டது போன்ற இந்தத் தனது தலைமைப் பணியில் தான் இழப்பதாக உணர்பவை குறித்து பகிர்ந்து கொண்டார்.

நோயாளிச் சிறார், சிறையில் கைதிகள், வாழ்வில் வாய்ப்புப்பகளை இழந்தவர்கள், போன்றவர்களைச் சந்தித்தபோது தனக்கு ஏற்பட்ட கவலை, இன்னும், யாராவது சில நல்ல காரியங்கள் செய்தபோது அவர்களை நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என ஏற்பட்ட உணர்வுகள் போன்றவற்றையும் பேட்டியில் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை.

புனித பேதுருவின் வழிவருபவராகத் தான் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று ஒருபோதும் எதிர்பார்த்ததே கிடையாது என்றும் தெரிவித்த திருத்தந்தை, ஆயினும், ஒரு துறவியின், ஓர் இயேசு சபை உறுப்பினரின் வாழ்வு காலத்தின் தேவைக்கேற்ப எவ்வாறு மாற்றத்துக்கு உட்படுகின்றது என்றும் கூறினார்.

தினமும் ஆறு மணி நேரம் உறங்குவதாகவும், மதியம் நாற்பது நிமிடங்கள் ஓய்வெடுப்பதாகவும், கடிகார அறிவிப்பு ஒலி இன்றி தானாகவே குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழும்புவதாகவும் தெரிவித்த திருத்தந்தை, தெருக்களில் நடந்து செல்வது, கடையில் அமர்ந்து பிட்சா சாப்பிடுவது போன்றவற்றை தற்போதைய வாழ்வில் இழப்பதாகவும் கூறினார்.    

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒவ்வொரு நாளைய வாழ்வு பற்றிய சில உள்தூண்டுதல்கள் இப்பேட்டியில் வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.