2015-05-26 15:53:00

பிரான்சிஸ்கன் சபையினரின் அழைப்பு எளிய மனம், ஏழ்மை வாழ்வு


மே,26,2015. பிரான்சிஸ்கன் சபையினரின் அழைப்பு, எளிய மனத்தையும், உடன்பிறப்பு உணர்வையும் மையமாகக் கொண்டது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Order of Friars Minor என்றழைக்கப்படும் பிரான்சிஸ்கன் சபையின் பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் 200 பிரதிநிதிகளை இச்செவ்வாயன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, குழந்தை மனம், உடன்பிறப்பாளர் நிலை ஆகிய இரு தலைப்புக்களில் தனது கருத்துக்களை வழங்கினார்.

குழந்தை மனத்துடன் வாழ்வதென்பது, ஒருவர் இறைவனின் எல்லையில்லா இரக்கத்துக்குத் தன்னை முழுமையாகக் கையளித்து, இறைவன் முன்பாக சிறியவராக இருந்து, சிறியவராக உணர்வதாகும் என்றுரைத்த திருத்தந்தை, ஒருவர் தனது சிறுமையையும், பாவநிலையையும் ஏற்கும்போது, மீட்பைப் பெறுவதற்கு, அவர் தன்னை அனுமதிக்கிறார் என்று கூறினார்.

இறைவன் முன்பாக சிறியவராக உணர்வது என்பது, உண்மையான பகிர்வு மற்றும் தொண்டு மனப்பான்மையில், ஏழைகளுக்கும் தேவையில் இருப்போருக்கும் தெளிவான செயல்கள் மூலம் இறைவனின் கருணைக்குச் சாட்சி சொல்வதற்கு, அமைப்புமுறைகள், எண்ணங்கள் மற்றும் பாதுகாப்பு உணர்வை விட்டு விலகுவதாகும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உடன்பிறப்பாளர் நிலையில் வாழ்வதென்பது, பிரான்சிஸ்கன் சபையினராக வாழ்வதன் மற்றுமொரு கூறு என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடக்க கால பிரான்சிஸ்கன் சபையினர் இந்த முழு உலகையும் தங்களின் நற்செய்தி வாழ்வுக்குச் சான்று சொல்லும் இடமாக நோக்கினர் என்றும், ஏழ்மையில் வாழுமாறும்  கூறினார்.

துறவற வாழ்வை வழி நடத்துபவர் தூய ஆவியார் என்பதை நினைவுபடுத்தி, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோர் தூய ஆவியாரால் ஒளியூட்டப்பட்டு, வழிநடத்தப்பட  தங்களை அர்ப்பணிக்கும்போது அவர்கள் உலகிலும் திருஅவையிலும் தங்களின் இறைவாக்கு இருப்பை நன்கு கண்டறிவார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.