2015-05-26 16:16:00

ஆப்ரிக்க அரசுகள் நாடுகளைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்


மே,26,2015. பல ஆப்ரிக்க அரசுகள், நாட்டைக் கட்டியெழுப்புவதிலும், நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பதிலும் இன்னும் வெற்றியடையாத நிலையில், அனைத்து ஆப்ரிக்க அரசுகளும் தங்களின் நாடுகளைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று ஆப்ரிக்க கர்தினால் ஒருவர் கூறினார்.

ஆப்ரிக்க சுதந்திர அல்லது ஆப்ரிக்க விடுதலை நாளாக கடைப்பிடிக்கப்பட்ட இத்திங்களன்று வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், ஆப்ரிக்காவில் வாழும் பெரும்பாலான மக்கள் ஒருமைப்பாட்டுணர்வை மதிக்கின்றனர் என்று கூறினார்.

பெரும்பாலான ஆப்ரிக்க மக்கள், தங்களைத் தேசியக் குழுவாக உணர்வதைவிட, தாங்கள் சார்ந்துள்ள பூர்வீக இனக் குழுக்களுடனே அதிகம் ஒருமைப்பாட்டுணர்வை உணர்கின்றனர் என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன்.

மேலும், இந்த ஆப்ரிக்க நாளன்று பேசிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இந்த நாள், ஆப்ரிக்க நாடுகளின் சாதனைகள் குறித்தும், அந்நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் சிந்திப்பதற்கு அழைக்கின்றது என்று தெரிவித்தார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.